Published : 24 Apr 2015 09:11 AM
Last Updated : 24 Apr 2015 09:11 AM
கர்நாடக மாநிலத்தில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள 40 ஆயிரம் வங்கதேச மக்களை உடனடியாக நாடு கடத்த வேண்டும் என அம்மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி போர்க்கொடி தூக்கியுள்ளார். இதற்கு மனித உரிமை ஆர்வலர்களும், வங்கதேச மக்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சமீப காலமாக பெங்களூரு, மங்களூரு உள்ளிட்ட கர்நாடகத்தின் பல பகுதிகளில் ஆப்பிரிக்கர்கள், திபெத்தியர்கள், வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கர்நாடக அரசிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.
எனவே, கர்நாடகத்தில் தொடரும் இனவெறி தாக்குதலை தடுக்க அம்மாநில அரசு புதிய திட்டங்களை வகுத்துள்ளது. வெளிநாட்டினரிடையே உள்ளூர் மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், போலீஸார் ஆங்காங்கே வெளிநாட்டினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆலோசனை கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கர்நாடக மாநில பாஜக துணைத் தலைவர் அசோக், “கர்நாடகத்தில் சட்டவிரோதமாக வாழும் வெளிநாட்டினரையும், ஆப்பிரிக்க மாணவர்களையும் உடனடியாக வெளியேற்ற வேண்டும். அப்போதுதான் குற்றச்செயல்கள் குறையும். இல்லாவிடில், எதிர்காலத்தில் தீவிரவாத சம்பவங்களும் அரங்கேறலாம்''என எச்சரித்தார்.
இந்நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமி, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.அதில் கூறியுள்ளதாவது:
கர்நாடகத்தில் பெங்களூரு, மங்களூரு, மைசூரு, பிரியபட்டணா, ஹூன்சூரு, சாமராஜ் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் வங்கதேச குடிமக்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர். இந்த குடியேற்றத்தின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. சமீபத்திய கணக்கெடுப்பில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையிலான வங்கதேச குடிமக்கள் சட்ட விரோதமாக கர்நாடகத்தில் குடியிருப்பதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு சட்டவிரோதமாக குடியேறியுள்ள வங்கதேச குடிமக்களில் பலர் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை பெற்றுள்ளனர். வாக்கு வங்கிக்காக வங்கதேச மக்களுக்கு இந்திய அரசின் அட்டைகளை வழங்கியது சட்ட விதிமீறல் ஆகும். இந்திய அரசின் சலுகைகளை சட்டவிரோதமாக ஊடுருவியுள்ள வங்கதேச குடிமக்கள் அனுபவிப்பதால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.
மேலும், வங்கதேச குடிமக்களில் பெரும்பாலானோர் ஏழ்மை நிலையில் உள்ளதால் பாலியல் தொழில், கள்ள நோட்டு அச்சடித்தல், போதைப்பொருள் விற்பனை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்தியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக பிடிபட்ட பெண்களில் 8 சதவீதம் பேர், சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
அதே போல இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ள வங்க தேசத்தவர்களில் 80 சதவீதம் பேர் கர்நாடகத்தில் குடியேறியுள்ளனர். இது தொடர்பாக சட்டப்பேரவையில் பலமுறை பேசியுள்ளேன். இருப்பினும், கர்நாடக அரசு இந்த விவகாரத்தில் தொடர்ந்து அலட்சிய போக்கை காட்டி வருகிறது. பெரிய அளவிலான குற்றச் சம்பவங்கள் நடப்பதற்குள் சட்டவிரோத வங்கதேச குடியேற்றங்கள் தொடர்பாக உறுதியான முடிவு எடுக்க வேண்டும்.
எனவே, கர்நாடகத்தில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வங்கதேச குடிமக்களை உடனடியாக கண்டறிந்து நாடு கடத்த வேண்டும். தேவைப்பட்டால் இது தொடர்பாக மத்திய அரசின் உதவியையும் கேட்டுப் பெற வேண்டும்''என குமராசாமி குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு
குமாரசாமியின் இந்த கடிதம் தொடர்பாக ‘புதிய சோஷலிச மாற்றம்' அமைப்பின் தலைவர் ஜெகதீஷ் சந்திராவிடம் கேட்டப்போது, “மதச்சார்பற்ற ஜனதா தளம் என பெயர் வைத்துக்கொண்டு குமாரசாமி மத அரசியல் செய்து வருபவர். வங்கதேசத்தில் இருந்து வந்த ஏழைகளை தீவிரவாதியாக சித்தரிக்கும் சதியில் இறங்கியுள்ளார். வங்கதேசத்து மக்களுக்கும் இந்தியாதான் தாய்நாடு என்பதை யாராலும் மறுக்கமுடியாது. வங்கதேசத்து மக்களுக்கும் இந்தியாவுக்கும் எல்லாவிதத்திலும் உறவு இருக்கிறது.
கர்நாடகத்தில் 4 லட்சம் வங்கதேச மக்கள் இருந்தாலும், 40 ஆயிரம் பேர் இருந்தாலும், 4 பேர் இருந்தாலும்கூட அவர்களை வெளியேற்றக் கூடாது.
குற்றச்செயல்களின் எண்ணிக்கைப் பற்றி பேசும் அரசியல்வாதிகள் வங்கதேச தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து பேச தயாராக இருக்கிறார்களா? வங்கதேச மக்களை நாடு கடத்த முயற்சித்தால் மனித உரிமை அமைப்புகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்''என்றார். இதே போல பல்வேறு மனித உரிமை ஆர்வலர்களும், வங்கதேச மக்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக தமிழகத்தில் தங்கியுள்ள வங்கதேச இளைஞர்கள் தமிழக இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி கடத்திச் செல்வது குறித்து நேற்று ‘தி இந்து‘ நாளிதழில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT