Published : 18 Apr 2015 02:57 PM
Last Updated : 18 Apr 2015 02:57 PM
ஜனதா குடும்பத்தின் மாநிலங்களவை தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள சரத் யாதவுக்குப் பதிலாக முலாயம்சிங் யாதவின் சகோதரரான ராம்கோபால் யாதவ் அப்பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதனால், ஜனதா பரிவார் ஒன்றிணைந்த நான்கு நாட்களுக்குள் கருத்து வேறுபாடு கிளம்பி விட்டதாகக் கருதப்படுகிறது.
கடந்த 15 ஆம் தேதி சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், இந்திய தேசிய லோக் தளம் மற்றும் சமாஜ்வாதி ஜனதா ஆகிய ஆறு கட்சிகளின் தலைவர்களால் 'ஜனதா பரிவார்' என்ற பெயரில் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டது.
அதில் நாடாளுமன்றத்தின் மக்களவை தலைவராக முலாயம் சிங்கும் மாநிலங்களவை தலைவராக சரத் யாதவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இவர்களில் உ.பியை ஆளும் சமாஜ்வாதி கட்சியின் தலைவராக முலாயமும், பிஹாரை ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராகவும் சரத் யாதவ் இருந்தனர்.
இந்நிலையில், ஜனதா ஒன்றிணைந்த நான்கு நாட்களுக்குள் கருத்து வேறுபாடுகள் கிளம்பியுள்ளது. சரத் யாதவுக்குப் பதிலாக முலாயமின் சகோதரரும் அவரது கட்சியின் மூத்த எம்பியுமான ராம்கோபால் யாதவை மாநிலங்களவை தலைவராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து நேற்று லக்னோ செய்தியாளர்களிடம் சமாஜ்வாதி கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான கிரோன்மாய் நந்தா கூறுகையில், "ஒன்றிணைந்த கட்சியின் மாநிலங்களவை தலைவராக அதில் நீண்ட காலமாக உறுப்பினராக இருப்பவர் அமர்த்தப்பட வேண்டும். சரத் யாதவ் ஒரு மூத்த உறுப்பினர் என்பதில் ஐயமில்லை. எனினும், அவரை விட அதிக காலம் மாநிலங்களவையின் உறுப்பினராக இருந்து வருபவர் ராம்கோபால். எனவே அவரையே மாநிலங்களவைத் தலைவராக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
இருப்பினும், இது தனது தனிப்பட்ட கருத்து தவிர, அதன் மீது கட்சி எந்த முடிவையும் எடுக்கவில்லை' எனக் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஜனதா குடும்பத்தில் இணைந்த கட்சிகளில், சமாஜ்வாதி கட்சிக்கு அதிகமாக 5, ராஷ்ட்ரீய ஜனதா தளத்திற்கு 4, மற்ற மூன்று கட்சிகளுக்கு தலா 2 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாநிலங்களவையிலும் மொத்தம் உள்ள 30-ல் அதிக இடங்களாக சமாஜ்வாதி 15 பெற்றுள்ளது.
தற்போது மாநிலங்களவையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவராக ராம்கோபால் இருந்து வருகிறார். அப்பதவிக்கு, ஜனதா குடும்பத்தில் எடுத்த முடிவின்படி சரத் யாதவ் நியமிக்கப்பட்டால் அது சமாஜ்வாதிக்கு பெரிய இழப்பாகும் எனக் கருதப்படுகிறது.
இது, 2017-ல் வரவிருக்கும் உ.பியின் அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் சமாஜ்வாதி கட்சியின் சில தலைவர்கள் கருதுகின்றனர். மேலும், ஜனதா இணையும் போதே மாநிலங்களவை தலைவர் பதவி தமக்கு தரப்பட வேண்டும் என ராம்கோபால் யாதவ் வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இது தமக்கு கிடைக்காது எனத் தெரிந்த பின், ஜனதா குடும்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்ததாகவும், இந்த காரணத்திற்காக ஒன்றிணையும் நாளில் கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
கடந்த 1977-ம் ஆண்டு முதன் முறையாக தோன்றிய ஜனதா கட்சியில் அதன் தலைவர்களுக்கு இடையே முக்கியப் பதவியில் அமர்வது குறித்துமான கருத்து வேறுபாடுகள் கிளம்பின. இதனால், அடுத்த மூன்று வருடங்களில் ஜனதா கட்சி உடைய இந்த பதவி பிரச்சனையும் ஒரு முக்கியக் காரணமாக இருந்தது நினைவு கூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT