Published : 11 Apr 2015 07:29 PM
Last Updated : 11 Apr 2015 07:29 PM
மதம் தொடர்பான நிகழ்ச்சிகள் உட்பட யானைகளைப் பயன்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் வரும் ஏப்ரல் 17-ம் தேதி தடை விதிக்கலாம் என்று பரவலான எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
மதம் சார்ந்த நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகள், பொதுவிழாக்கள் ஆகியவை உட்பட யானைகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த உத்தரவு ஏப்ரல் 17-ம் தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
55 வயதான சுந்தர் என்ற யானை மகாராஷ்டிர மாநிலத்தின் கோல்ஹாபூர் மாவட்ட கோயில் ஒன்றில் படுமோசமான சூழ்நிலையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு பல ஆண்டுகளாக துன்பம் அனுபவித்து வர கடைசியாக கடந்த ஆண்டு மும்பை உயர் நீதிமன்றம் தலையிட்டு அந்த யானையை கோயிலின் பிடியிலிருந்து மீட்கப்பட்டது.
ஆனால், இதற்கு முன்னால் பிஜ்லி என்ற பெயருடைய 58 வயதான யானை ஒன்று கோயில் திருவிழாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது சாலையில் சுருண்டு விழுந்து உயிரை விட்டது. பூர்ணிமா என்ற பெயருடைய 60 வயதுக்கும் மேலான யானை மார்ச் 21, 2014-ம் ஆண்டு பட்டினியால் உயிரிழந்தது.
இதனையடுத்து ஏப்ரல் 17-ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் சமூக நீதி அமர்வு யானைகளின் துன்பத்துக்கு முடிவு கொண்டு வரும் என்று பிராணிகள் வதை தடுப்பு அமைப்பினர் ஆவலாக எதிர்நோக்குகின்றனர்.
யானைகளைப் பயன்படுத்துவதை தடை செய்யக் கோரி பெங்களூரில் இயங்கும் வனவிலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் மற்றும் பிற பிராணிகள் நல சங்கங்களும் பொதுநல மனு செய்துள்ளன.
மேற்கூறிய 3 யானைகளின் கதைகள் இந்த மனுவில் விவரமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. அது நீதிபதி மதன் பி.லோகுரின் உணர்வுகளையும் அசைத்து விட்டது என்று கூறப்படுகிறது. இதனையடுத்து நாட்டின் தேசிய பாரம்பரிய யானைகளை லாபத்துக்காகப் பயன்படுத்துவது பற்றி கவலையடைந்துள்ளதாக தெரிகிறது.
"இது ஒரு முக்கியமான விஷயம், புகழ்பெற்ற குருவாயூர் கோயிலில் 90 யானைகள் உள்ளன" என்று நீதிபதி யு.யு.லலித் கருத்து தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் வனங்கள் வழிகாட்டுதல், யானைகளை நாளொன்றுக்கு 30கிமீ-க்கு மேல் நடக்கச் செய்வதையும், தொடர்ச்சியாக 3 மணி நேரம் நடக்க வைப்பதையும் தடை செய்துள்ளது.
அந்த பொதுநல மனுவில் மேலும் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கோயில் திருவிழாக்கள் பல கடும் வெயில் காலங்களில் நடைபெறுகிறது. இந்த விழாக்களில் கடும் வெயிலில் யானைகளை நீண்ட தூரம் ஊர்வலமாக அழைத்துச் செல்லும் பழக்கம் இருந்து வருகிறது.
இது விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் 2007-10-ம் ஆண்டுகளில் பிடித்து வைத்திருக்கும் யானைகள் தொடர்புடைய 88 மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்பதையும் இதில் குறைந்தது 71 பாகன்கள் யானைகளால் இறந்திருப்பதையும் சுட்டிக்காட்டியதோடு, இதே காலக்கட்டத்தில் சுமார் 215 யானைகள் கொடூரமாக நடத்தப்பட்டதன் காரணமாக இறந்திருப்பதையும் இந்த மனு கோர்ட்டுக்கு சுட்டிக் காட்டியுள்ளது.
ஏப்ரல் 17-ம் தேதி உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT