Published : 15 Apr 2015 08:46 AM
Last Updated : 15 Apr 2015 08:46 AM
இரும்பு தாது கடத்தல் வழக்கில் கைதாகி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடக பாஜக எம்எல்ஏ ஆனந்த் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதனால் அவர் தேர்வான பெல்லாரி மாவட்டத்தில் உள்ள விஜயநகர் தொகுதியில் விரைவில் இடைத் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ரெட்டி சகோதரர்களுக்கு நெருங்கியவரான ஆனந்த் சிங், பெல்லாரி மாவட்டத்தில் உள்ள விஜயநகர் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் கடந்த பாஜக ஆட்சியில் சுற்றுலா துறை அமைச்சராக பதவி வகித்த போது சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக கர்நாடகாவின் லோக் ஆயுக்தா போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனிடையே கடந்த 2013-ம் ஆண்டு சிபிஐ போலீஸார் இவர் மீது 1.45 டன் இரும்பு தாது முறைக்கேடாக ஏற்றுமதி செய்ததாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில் கர்நாடக சிஐடி போலீஸார் கடந்த ஆண்டு ஆனந்த் சிங் மீது பெல்லாரி அரசு கிடங்கில் இருந்து 17,086 டன் இரும்பு தாது கடத்தியதாக மற்றொரு வழக்கு பதிந்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு பெங்களூருவை அடுத்துள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் ஆனந்த் சிங் கர்நாடக சிறைத்துறை கூடுதல் டிஐஜி கமல் பன்ட் மூலமாக சட்டப்பேரவை சபாநாயகர் காகோடு திம்மப்பாவுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார். அதில், 'இரும்பு தாது கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் எனது தொகுதியின் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட இயலவில்லை. எனவே எனது தொகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் காகோடு திம்மப்பா விரைவில் பாஜக எம்எல்ஏ ஆனந்த் சிங்கின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்வார். இதையடுத்து பெல்லாரியில் உள்ள விஜயநகர் தொகுதிக்கு மே மாதத்தில் இடைத் தேர்தல் வர வாய்ப்பு இருப்பதாக கர்நாடக அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT