Last Updated : 26 Apr, 2015 05:58 PM

 

Published : 26 Apr 2015 05:58 PM
Last Updated : 26 Apr 2015 05:58 PM

செம்மரக் கடத்தல் வழக்கில் தெலுங்கு நடிகை நீத்து கைது

செம்மரக் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த தெலுங்கு புதுமுக நடிகை நீத்து அகர்வாலை ஆந்திர போலீஸார் கர்னூல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நீத்து அகர்வால் (27) நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக கர்னூல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.ரவிகிருஷ்ணா தெரிவித்தார்.

கர்னூலில் 2 மாதங்களுக்கு முன்பு 34 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நீத்து அகர்வால் 10-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் வனச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவில் செம்மரக் கடத்தல் மூலம் பல கோடிகள் சம்பாதித்து, அந்தப் பணத்தை வைத்து திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த மஸ்தான் வலி என்பவரை ஆந்திர போலீஸார் கடந்த 13-ம் தேதி கைது செய்தனர்.

2013-ல் மஸ்தான் வலி தயாரித்த 'பிரேம பிரயாணம்' என்ற தெலுங்கு படத்தில் நீத்து அகர்வால் நாயகியாக அறிமுகமானார். இதன் பிறகு இவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.

இந்நிலையில் மஸ்தான் வலியிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, செம்மரக் கடத்தல் தொடர்பான பண விவகாரங்களை நீத்து அகர்வால் கவனித்து வந்ததாக தெரியவந்தது.

இதுகுறித்து கர்னூல் எஸ்.பி. ஏ.ரவிகிருஷ்ணா கூறும்போது, "செம்மரக் கடத்தல் தொடர்பாக ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள பாலு நாயக் என்பவரின் வங்கிக் கணக்குக்கு நீத்து அகர்வாலின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.05 லட்சம் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மஸ்தான் வலி கூறியதன் பேரில் இந்தப் பணத்தை நீத்து பரிமாற்றம் செய்துள்ளார். இதற்கு முன்பும் அவர் இதுபோல் பலமுறை பணப் பரிமாற்றம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வழக்கை பல்வேறு கோணங்களிலும் விசாரித்து வருகிறோம்" என்றார்.

இதனிடையே நீத்து அகர்வாலிடம் விசாரித்தபோது, "மஸ்தான் வலியுடன் எனக்கு திருமணம் ஆனது. அவர் என்னை கொடுமைப்படுத்தி வந்தார்" என்று கூறியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எலுமிச்சை வியாபாரியாக இருந்த மஸ்தான் வலி செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு பெருமளவில் பணம் சம்பாதித்துள்ளார். 20 குற்ற வழக்குகளில் அவருக்கு தொடர்புள்ளதாகவும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

செம்மரக் கடத்தலில் அரசியல் தலைவர்கள் சிலருக்கு தொடர்புள்ளதாக கூறப்படுவது பற்றிய கேள்விக்கு, "இது தொடர்பாக ஆதாரங்களை திரட்டி வருகிறோம்" என எஸ்.பி. ரவிகிருஷ்ணா பதில் அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x