Published : 20 Apr 2015 05:05 PM
Last Updated : 20 Apr 2015 05:05 PM
ஒரு மாத ஊதியத்தை தங்கள் பகுதியில் வாழும் விவசாயிகளுக்கு பிரித்தளிக்கும்படி பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவியான மாயாவதி தம் எம்.எல்.ஏ மற்றும் எம்பிக்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில் பருவம் மாறி பெய்த மழை மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிப்படைந்த பயிர்கள் பல மாநிலங்களின் விவசாயிகளை தற்கொலை செய்யவும் தூண்டியுள்ளன.
இந்தப் பிரச்சனையில் விவசாயிகளை காக்க வேண்டி முறையான நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தச் சூழலை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி மத்திய, மாநில அரசுகளை கடும் விமர்சனம் செய்து அரசியல் செய்வதிலும் பல எதிர்கட்சிகள் இறங்கி வருகின்றன.
இந்த வகையில், உபியின் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவியான மாயாவதி, தனது எம்.எல்.ஏ மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் அனைவரும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை விவசாயிகளுக்கு பிரித்தளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மாயாவதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமீபத்தில் ஏற்பட்ட இயற்கை தாக்கத்தினால் விவசாயிகள் உபியில் கடும் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்கள் பிரச்சனை உபி மாநில அரசு மற்றும் மத்திய அரசு தீர்க்கும் என அவர்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. காரணம், விவசாயிகளின் நஷ்ட ஈடாக உபி அரசு அவர்களுக்கு ரூபாய் 63 மற்றும் 100 என காசோலைகளை அளித்தது. இதன் மீது பத்திரிக்கைகளில் எழுந்த கடும் விமர்சனங்களுக்கு பிறகு அது, ரூபாய் 1500 என உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே, எங்கள் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் தம் பகுதியில் வாழும் விவசாயிகளை நேரடியாக சென்று சந்தியுங்கள். அவர்களில் அதிகமானப் பிரச்சனையில் வாடும் விவாசாயிகளுக்கு தமது இரு மாத ஊதியத்தை பிரித்து அளித்து உதவிடுங்கள். இதை காரணம் கொண்டும் அரசு மூலமாக அளிக்க வேண்டாம். விவசாயிகள் விஷயத்தில் மத்திய, மாநில அரசின் செயல்பாடுகள் மிகவும் கண்டிக்கத்தக்கது.
பிரதமர் நரேந்தர மோடி மற்றும் உபி முதல் அகிலேஷ் யாதவ் ஆகிய இருவரும் விவசாயிகளின் பிரச்சனை கவனிக்காமல் வெளிநாட்டுப் பயணங்கள் சென்றபடி உள்ளனர். எனத் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் நலனில் அரசு கவனம் செலுத்தாதை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் ஏப்ரல் 26-ல் உபி மாநிலத்தின் மாவட்ட தலைமையகங்களில் போராட்டம் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சிக்கு உபி சட்டப்பேரவையில் 80 எம்.எல்.ஏக்கள் மற்றும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பத்து எம்பிக்களும் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT