Last Updated : 18 Apr, 2015 07:54 AM

 

Published : 18 Apr 2015 07:54 AM
Last Updated : 18 Apr 2015 07:54 AM

மேகேதாட்டு அணை விவகாரம்: தமிழகத்தைக் கண்டித்து கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதை எதிர்க்கும் தமிழகத்தைக் கண்டித்து கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் புதிதாக அணைகள் கட்டி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தவும் நீர்மின் நிலையம் அமைக்கவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழக அரசும், அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்பு களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மேகேதாட்டு திட்டத்தை நிறுத்தக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. க‌டந்த 28-ம் தேதி கர்நாடக அரசை கண்டித்து விவசாய சங்கங்களின் சார்பாக‌ தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

கன்னட அமைப்புகள் தீவிரம்

மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதை எதிர்க்கும் தமிழக அரசை கண்டித்து கர்நாடகத்தில் இன்று கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. கன்னட சலுவளிக் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்துக்கு பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சி களும், 630 கன்னட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

கர்நாடக விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட விவசாய சங்கங்களும், நடிகர் ராஜ்குமார் குடும்பத்தினர், கன்னட‌ திரைப்பட வர்த்தகசபை, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு, ஆட்டோ ஓட்டுநர் சங்கம், டாக்சி ஊழியர்கள் சங்கம், வர்த்தக அமைப்புகள் உட்பட‌ 500-க்கும் மேற்பட்ட‌ அமைப்பினரும் இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முழு அடைப்பு காரணமாக தமிழகம்- கர்நாடகா இடையே இன்று போக்குவரத்து சேவை முற்றிலுமாக பாதிக்கப்படும் என போக்குவரத்து கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

கர்நாடகத்தின் உரிமை

இது தொடர்பாக கன்னட சலுவளி கட்சியின் தலைவரும், கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான வாட்டாள் நாகராஜ், ‘தி இந்து' விடம் கூறியதாவது:

மேகேதாட்டு திட்டத்தை நிறை வேற்றுவதால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது' என தமிழகத்தை சேர்ந்த மூத்த‌ அரசியல் வாதியான சுப்பிரமணியன் சுவாமியே கூறியுள்ளார். ஆனால் தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் உள்நோக்கத்துடன் கர்நாடகத்தை எதிர்த்து வருகின்றன. தமிழகத்தின் எதிர்ப்புக்கு பயந்து மேகேதாட்டு கூட்டு குடிநீர் திட்டத்தை நிறுத்த மாட்டோம்’’ என்றார்.

க‌ர்நாடக தமிழ் மக்கள் தலைவர் சி.ராசன் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘கர்நாடகத்தில் காவிரி விவகாரத்தின் போது நடந்த போராட்டத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழ் அமைப்புகளின் அலுவலகங்கள், தமிழர்களுக்கு சொந்தமான வணிக நிறுவனங்கள், ஊடக அலுவலகங்கள் மீது கன்னட அமைப்பினர் கல்லெறிந்துள்ளனர். எனவே இந்தப் போராட்டத்தின் போது கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கும், தமிழர்களின் உடைமைகளுக்கும் கர்நாடக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முழு அடைப்பின் காரணமாக பெங்களூருவில் தமிழர்கள் வசிக்கக்கூடிய பகுதிகளுக்கும், தமிழ் அமைப்புகளின் அலுவலகங் களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x