Published : 21 Apr 2015 08:09 AM
Last Updated : 21 Apr 2015 08:09 AM
ஏமனில் உள்ள இந்திய தூதரகம் ஜிபூட்டிக்கு மாற்றம்
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்:
உள் நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனில் சிக்கித் தவித்த 6,688 பேர் ‘ராஹத்’ மீட்பு திட்டத்தின் கீழ் விமானம், கப்பல் மூலம் மீட்கப்பட்டனர். இதில் 4,741 பேர் இந்தியர்கள், 1,947 பேர் வெளிநாட்டவர். மீட்புப் பணி முழுவதும் முடிவடைந்துவிட்டதால், ஏமன் தலைநகர் சனாவிலிருந்த இந்திய தூதரகம் கடந்த 15-ம் தேதி அந்நாட்டுக்கு அருகே உள்ள ஜிபூட்டிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஏமனில் இயல்புநிலை திரும்பும் வரை இந்திய தூதரகம் ஜிபூட்டியில் செயல்படும்.
வீட்டு வேலை செய்வோர் நலனைப் பாதுகாக்க தனிச் சட்டம்
மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா:
வீட்டு வேலை செய்பவர்களின் பணிச் சூழலை நெறிமுறைப்படுத்தவும் அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கவும் புதிய சட்டம் இயற்றுவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பான வரைவு அறிக்கை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும். கடந்த 2011-12-ம் ஆண்டின் தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் ஆய்வுப்படி, நாட்டில் 41.3 லட்சம் பேர் வீட்டு வேலையில் ஈடுபட்டுள்ளனர். அதில் 27.9 லட்சம் பேர் பெண்கள். இவர்களின் நலனைப் பாதுகாக்க இதுவரை சட்டம் ஏதும் இயற்றப்படவில்லை. எனினும், இவர்களுக்கு குறைந்தபட்ச கூலியை நிர்ணயிக்க வேண்டும் என்றும் வேலை பட்டியலில் வீட்டு வேலையையும் சேர்க்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
கொத்தடிமையாக இருந்த 3 லட்சம் தொழிலாளர்கள் மீட்பு
மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா:
கடந்த மார்ச் 31-ம் தேதி வரையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொத்தடிமைகளாக இருந்த 3 லட்சத்து 175 பேரை அடையாளம் கண்டு அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக தமிழகத்திலிருந்து 65,573 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதுபோல கர்நாடகாவிலிருந்து 64,600 பேரும், மகாராஷ்டிராவிலிருந்து 50,441 பேரும், உத்தரப் பிரதேசத்திலிருந்து 35,572 பேரும் மீட்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக உத்தராகண்டிலிருந்து 5 பேரும், குஜராத்திலிருந்து 64 பேரும் ஜார்க்கண்டிலிருந்து 196 பேரும் மீட்கப்பட்டனர்.
விமான நிலைய ஆணையம் மூலம் ரூ.5,814 கோடி வருவாய்
மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு:
இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) மூலம் கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசுக்கு ரூ.5,814 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் 2011-12-ல் ரூ.1,186.56 கோடியும், 2012-13-ல் ரூ.1,344.13 கோடியும், 2013-14-ல் ரூ.1,438.12 கோடியும், 2014-15-ல் ரூ.1,845.16 கோடியும் (உத்தேசமாக) கிடைத்துள்ளது.
இந்தத் தொகை டிவிடெண்ட், டிவிடெண்ட் வரி, உத்தரவாத கட்டணங்கள், அரசு பட்ஜெட் ஆதரவு கடன் மீதான வட்டி, வருமான வரி, சேவை வரி என பல்வேறு வழிகளில் கிடைத்துள்ளது.
டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய விமான நிலையங்களை சர்வதேச முனையங் களாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
தொல்பொருள் அமைவிட சட்டத்தை திருத்த முடிவு
மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா:
தொல்பொருள் அமைவிடம் மற்றும் எஞ்சியுள்ள பொருட்கள் (திருத்த) சட்டம் 2010-ல் திருத்தம் செய்ய இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியில் 1,700-க்கும் மேல் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இப்போது உள்ள தொல்பொருள் சட்டத்தின்படி (2010), பாது காக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள பகுதியிலிருந்து 100 மீட்டர் தூரம் வரை உள்ள கட்டிடங்கள், வீடுகள் ஆகியவை தடை செய்யப்பட்ட பகுதியாகும். இப்பகுதிகளில் கட்டிட மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமானால் சம்பந்தப்பட்ட அலு வலகத்தின் முன் அனுமதி பெற வேண்டும்.
விமான நிலையங்களில் எம்.பி.க்களுக்கான சலுகை தொடரும்
மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு:
விமான நிலையங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் டீ, காபி மற்றும் தண்ணீர் உள்ளிட்ட வசதிகளை நிறுத்தும் திட்டம் எதுவும் இல்லை. அவை தொடர்ந்து வழங்கப்படும். இந்த வசதிகள் வழங்குவதை உறுதி செய்ய விமான நிலையங்களில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், சில விமான நிலையங்களில் உள்ள விமான நிறுவனங்களும், பாதுகாவல் அலுவலர்களும் எம்.பி.க்களுக்கு உரிய வசதிகளை வழங்கவில்லை என புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து விசாரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT