Published : 26 Mar 2014 11:54 AM
Last Updated : 26 Mar 2014 11:54 AM
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதி யில் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ள ஜஸ்வந்த் சிங், பாஜகவிலிருந்து தானாக விலகப் போவதில்லை என்று தெரி வித்துள்ளார்.
தன்னை நீக்குவது தொடர்பாக கட்சிதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பார்மர் தொகுதியில் போட்டியிட ஜஸ்வந்த் சிங் விடுத்த வேண்டுகோளை பாஜக நிராகரித்துவிட்டது. இதையடுத்து, அத்தொகுதியில் அவர் சுயேச்சையாக களம் இறங்கியுள்ளார். விரைவில் கட்சியிலிருந்து அவர் விலகக் கூடும் அல்லது அவரை நீக்கும் முடிவை கட்சி அறிவிக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஜஸ்வந்த் சிங் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
“ஒரு நபரின் மீது மட்டும் கட்சி கவனம் செலுத்தி வருவது சரியல்ல. ஜனநாயக அரசியலில் இத்தகைய தனிநபர் துதிபாடல் எடுபடாது.
பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், திட்டமிட்டு என்னை கட்சியிலிருந்து ஓரங்கட்டிவிட்டார். இரண்டாவது முறையாக எனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டனர். நான் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளேன். எனினும், கடவுள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.
கட்சியிலிருந்து நான் விலக மாட்டேன். என்னை நீக்குவது தொடர்பாக கட்சிதான் முடிவு செய்ய வேண்டும்.
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே எனக்கு எதிராக செயல்படுவதற்கான காரணம் தெரியவில்லை. கட்சியின் தலைவராக வாஜ்பாய் இருந்தபோது, அவரிடமும், எல்.கே.அத்வானியிடமும் ராஜஸ்தான் முதல்வராக வசுந்தரா ராஜேவை நியமிக்க வேண்டும் என்று நானும் குடியரசு முன்னாள் துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத்தும்தான் பரிந்துரைத்தோம்.
வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்பு, இப்போதுவரை என்னை ஜெய்ப் பூர், டெல்லியில் உள்ள பாஜகவினர் தொடர்பு கொள்ளவில்லை.
இப்போது நடைபெற்று வரும் சம்பவங்கள் எல்லாம், கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானதாகும். பாஜகவின் கொள்கை, கோட்பாடுகளில் நம்பிக்கையில்லாதவர்களின் கட்டுப் பாட்டில் கட்சி உள்ளது.
ஜஸ்வந்த் சிங்கின் சொத்து மதிப்பு
பார்மர் தொகுதியில் ஜஸ்வந்த் சிங் கடந்த திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில், அவர் தெரிவித்துள்ள சொத்து விவரம்:
ரூ.6.14 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் தனக்கு இருப்பதாகவும், ரூ.51 ஆயிரத்து 570 ரொக்கம், 3 அரேபிய குதிரைகள், 51 தார்பர்க்கர் இன பசுக்கள் என ரூ.1.5 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பசுக்களை ஜெய்சால்மரிலும், பார்மரிலும் வைத்து பராமரித்து வருகிறார். 2 அரேபிய குதிரைகள் சவுதி அரேபிய இளவரசர் பரிசாக கொடுத்ததாகும். ஜஸ்வந்த் சிங்கின் மனைவி ஷீத்தல் குமாரிக்கு ரூ. 77 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.3 கோடியே 62 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன. ஜஸ்வந்த் சிங், 3 கார்கள், ஒரு டிராக்டரும், அவரின் மனைவி 3 கார்களும் வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT