Published : 01 Apr 2015 06:09 PM
Last Updated : 01 Apr 2015 06:09 PM
சோனியா காந்தி நைஜீரியப் பெண்ணாக இருந்திருந்து, வெள்ளை நிறத்தவராக இல்லாமல் இருந்திருந்தால் காங்கிரஸ் கட்சி அவருக்குத் தலைவர் பதவியை அளித்திருக்குமா என மத்திய இணையமைச்சர் கிரிராஜ் சிங் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணை யமைச்சர் கிரிராஜ் சிங் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ராஜீவ் காந்தி நைஜீரியப் பெண்ணை திருமணம் செய்திருந்து, அப்பெண் வெள்ளை நிறத்தவராக இல்லாமலிருந்தால் காங்கிரஸ் அவரது தலைமையை ஏற்றிருக்குமா” எனக் கேள்வி யெழுப்பினார்.
இது ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கிரிராஜ் சிங் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இது முதன் முறையல்ல. மக்களவைத் தேர்தலின்போது, “நரேந்திர மோடியை ஏற்காதவர்கள் பாகிஸ் தானுக்குச் சென்றுவிடலாம். அவர்களுக்கு இந்தியாவில் இட மில்லை” எனக் கூறியிருந்தார்.
இதுதவிர ராகுல் காந்தி குறித்து அவர் பேசியதும் தொலைக் காட்சிகளில் நேற்று ஒளிபரப்பானது.
அதில், “எங்களுக்குப் பதில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்து, ராகுல் காந்தி பிரதமராக இருந்திருப் பாரேயானால், சில காரணங் களுக்காக அவர் 43 -47 நாட்கள் காணாமல் போய் விட்டால், அப்போது என்ன நடக்கும்? பட்ஜெட் கூட்டத்தொடர் முழுமையாக முடிந்து விட்டது. மலேசிய விமானத்தைப் போல ராகுல் காணாமல் போய்விட்டார். காங்கிரஸ்தான் எதிர்க்கட்சி. அதன் தலைவர் பட்ஜெட் தொடருக்கு வரவில்லை. யாருக்கும் தெரியவில்லை. அவர் எங்கிருக் கிறார் எனச் சொல்வதற்கு காங்கிரஸ் தலைமை தயாராக இருக்க வில்லை” என கிரிராஜ் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கண்டனம்
சோனியா குறித்த கிரிராஜ் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் செய்திப்பிரிவு பொறுப்பாளர் ரண்தீப் சுர்ஜிவாலா கூறியதாவது:
அமைச்சரின் இந்த பைத்தியக் காரத்தனமான, வரம்புமீறிய பேச்சை காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது. அவரை பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்து, நாட்டிடம் மன்னிப்புக் கோர வேண்டும். இதுபோன்ற கருத்துகள் பாஜகவில் தார்மீக இழை அறுந்துவிட்டதையே காட்டுகிறது. அமைச்சர் கிரிராஜ் தனது சமநிலையை இழந்துவிட்டார். தனது வீட்டில் ரூ.1.14 கோடி பணம் மற்றும் அமெரிக்க டாலர்கள் திருட்டுப்போனதை போலீஸார் மீட்டும் கிரிராஜ் அதை திரும்பக் கோரவில்லை. அத்தகையவருக்குத்தான் மோடி அமைச்சர் பதவி கொடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறும்போது, “கிரிராஜ் மீது நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும். இவ்வாறு அவர் பேசுவது இது முதன்முறை அல்ல. இக்கருத்து பாஜகவின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது” என்றார்.
பாஜக விளக்கம்
இந்த சர்ச்சையிலிருந்து பாஜக விலகி நிற்கிறது. பாஜக மூத்த தலைவர் ஷா நவாஸ் கான் கூறும்போது, “நிறம் மற்றும் சாதி அடிப்படையில் பாஜக ஒருபோதும் அரசியல் செய்வதில்லை” என்றார்.
இணையமைச்சர் கிரிராஜ் சிங் கூறும்போது, “அக்கருத்து நான் அதிகாரப்பூர்வமற்ற வகையில் பேசியது. மக்கள் அதிகாரப்பூர்வமற்ற வகையில் இதுபோன்று பேசுவது வழக்கம். எப்படிப்பேசப்பட்டது என்பதையும் பார்க்க வேண்டும். சோனியா, ராகுல் உட்பட யார் மனதையாவது நான் புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தூதரகம் ஆட்சேபம்
கிரிராஜின் பேச்சுக்கு நைஜீரிய தூதரகம் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக் கான நைஜீரிய தூதர் (பொறுப்பு) ஓ.பி. ஓகோங்கோர் கூறும்போது, “நைஜீரியப் பெண் களை ஒப்பிட்ட கிரிராஜின் கருத்து மிக மோசமான ஒன்று. இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் புகார் செய்வோம். அவர் தனது கருத்தைத் திரும்பப் பெறுவதுடன், நைஜீரிய மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இப்பிரச்சினை தொடர்பாக எங்கள் அரசுக்குத் தெரியப்படுத்துவோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT