Published : 08 Apr 2015 05:43 PM
Last Updated : 08 Apr 2015 05:43 PM
ஆந்திர மாநிலம், திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் கடத்துவதற்காக செம்மரம் வெட்டிய தமிழக தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீஸார் திங்கட்கிழமை இரவு என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இது தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி ஆந்திர மாநில அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
சித்தூரில் நடந்த என்கவுன்டர் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு திங்கள்கிழமை இரவே உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தொடர்பு கொண்டு பேசினார். என்கவுன்டர் சம்பவம் தமிழக - ஆந்திர எல்லையில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ள நிலையில், விரிவான அறிக்கை அளிக்க உள்துறை அமைச்சகம் இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் - ஆந்திரா இடையே போக்குவரத்தில் நிலவும் பதற்றம் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு 2-வது நாளாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. இரு மாநில எல்லைகளிலும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆந்திர பேருந்துகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆந்திரா செல்லும் ரயில்களிலும் போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT