Published : 08 Apr 2015 08:57 PM
Last Updated : 08 Apr 2015 08:57 PM
வாரணாசி கோயிலில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் முதல் முறையாக பிரபல பாகிஸ்தான் பாடகர் உஸ்தாத் குலாம் அலி பங்கேற்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரசித்தி பெற்ற ‘சங்கத் மோச்சன்’ கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் இசைத் திருவிழா நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. வரும் 12-ம் தேதி வரை நடைபெறும் இந்த இசை விழாவில், 50-க்கும் மேற்பட்ட பிரபல இசைக் கலைஞர்கள் பங்கேற்று விருந்து படைக்க உள்ளனர். இதில் முதல் முறையாக பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல கஸல் பாடகர் உஸ்தாத் குலாம் அலி பங்கேற்கிறார்.
மேலும், சரோட் மாஸ்டர் உஸ்தாத் அம்ஜத் அலி கான், அவரது மகன்கள் அமான், அயான், கதக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மஹராஜ், ஒடிசி நடனக் கலைஞர் சோனால் மான்சிங், தபலா கலைஞர் ஹஸ்மத் அலி கான் உட்பட பிரபல கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதி வாரணாசி. எனவே, இந்த இசை நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதுகுறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், ‘‘இசை நிகழ்ச்சியில் பங்கேற்க மிகவும் விரும்பினேன். ஆனால், பணிச் சுமை காரணமாக இந்த முறை இசை நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாமைக்கு வருந்துகிறேன். பாகிஸ்தான் பாடகர் குலாம் அலி சாஹிப் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.
இந்நிலையில் அவர் தனது இசை நிகழ்ச்சியில் நான் பங்கேற்பதை விரும்புவதாக செய்தித் தாள்கள் மூலம் அறிந்தேன். துரதிருஷ்டவசமாக இந்த முறை என்னால் பங்கேற்க இயலவில்லை. எதிர்காலத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறும்போது பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கோயில் நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.
இசை நிகழ்ச்சி குறித்து கோயில் தலைமை குரு விஷ்வாம்பர் நாத் மிஸ்ரா கூறும்போது, ‘‘சங்கத் மோச்சன் கோயிலில் முதல் முறையாகப் பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆனால், தனக்கு நிறைய நிகழ்ச்சிகள் உள்ளதால் தன்னால் பங்கேற்க இயலாது என பிரதமர் தெரிவித்துள்ளார்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT