Published : 20 Apr 2015 05:48 PM
Last Updated : 20 Apr 2015 05:48 PM
சாமானிய மக்களைப் போலவே கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கும் கடன் இருப்பது சாதிவாரி கணக்கெடுப்பின்போது தெரியவந்துள்ளது. இதனால் கர்நாடக மக்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.
கர்நாடகத்தில் கடந்த 11-ம் தேதி தொடங்கிய சாதிவாரி கணக்கெடுப்பு மாநிலம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அங்குள்ள 1.33 கோடி குடும்பங்களில் வாழும் 6.50 கோடி மக்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலை குறித்த விவரங்கள் சேகரிக்கும் பணியில் 1.5 லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள காவிரி இல்லத்தில் முதல்வர் சித்தராமையாவிடம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது கணக்கெடுப்பாளர் சிவகுமார் கேட்ட 55 கேள்விகளுக்கு சித்தராமையா 35 கேள்விகளுக்கு எவ்வித தயக்கமும் இல்லாமல் பதில் அளித்தார்.
தனது சாதி, மதம், தாய்மொழி உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளித்த சித்தராமையா, உட்சாதி பிரிவு குறித்த தகவலை தெரிவிக்க விருப்பம் இல்லை என பதில் அளித்தார். அதே போல குடும்ப விவரங்களை கேட்டப்போது, ''எனக்கு 29 வயதில் திருமணம் ஆனது. மனைவி பெயர் பார்வதி, இரு மகன்களின் பெயர் ராகேஷ், யதீந்திரா என்றும் தெரிவித்தார்.
மேலும் தனக்கு 73 ஏக்கர் புன்செய் நிலம் இருக்கிறது. இதில் கேழ்வரகு, நெல், தென்னை சாகுபடி செய்கிறேன். பள்ளியில் சேர்ந்த வயது தெரியாது. ஆனால் கல்லூரியில் சேர்ந்து பிஎஸ்சி, எல்எல்.பி. வரை படித்துள்ளேன்.பெங்களூருவிலும், சொந்த கிராமமான சித்தராமனஹூண்டியில் சொந்தமாக வீடு இருக்கிறது. இதே போல வணிக வளாகமும், சொந்தமாக ஒரு காரும் இருக்கிறது.
சொந்தமாக தொழிலும், தொழிற்சாலையும் இல்லை. தனியார் மற்றும் அரசு வாரியங்கள்,கழகங்களில் உறுப்பினராக இல்லை. இட ஒதுக்கீட்டு மூலம் சலுகைகளைப் பெறவில்லை என பதிலளித்தார்.
''அப்பயென்றால் தற்போது என்ன வேலை செய்கிறீர்கள்?'' என கணக்கெடுப்பாளர் சிவகுமார் கேட்டதற்கு, சித்தராமையா சிரித்துக்கொண்டே, 'கர்நாடக மாநிலத்தின் முதல்வராக இருக்கிறேன்'' என்றார். இதனால் அங்கிருந்த கட்சினர் மற்றும் அதிகாரிகள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.
இதையடுத்து கணக்கெடுப்பாளர் சில கேள்விகளை பாதியில் நிறுத்திய போது, 'அனைத்து கேள்விகளையும் தயங்காமல் கேளுங்கள். எதையும் விடக் கூடாது' என சித்தராமையா அறிவுறுத்தினார். அப்போது கணக்கெடுப்பாளர் ''உங்களுக்கு கடன் இருக்கிறதா? எவ்வளவு இருக்கிறது?'' எனக் கேட்டார்.
அதற்கு பதில் தெரியாததால் சித்தராமையா, தனது உதவியாளரை திரும்பி பார்த்தார். அவர் காதில் சொன்னதை அடுத்து,'' எனக்கு கடன் இருக்கிறது. வங்கியில் வீட்டு கடன் பாக்கி இருக்கிறது. எவ்வளவு தொகை என்பது தெளிவாக தெரியவில்லை'' என்றார். கர்நாடக முதல்வருக்கே கடன் இருக்கிற தகவல் வெளியானதால் கட்சியினரும், மக்களும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT