Published : 26 Apr 2015 06:53 PM
Last Updated : 26 Apr 2015 06:53 PM
பாபா சாஹேப் அம்பேத்கரின் 125-ம் ஆண்டைக் கொண்டாடும் இந்த உன்னதமான கால கட்டத்தில், இனியும் நம் நாட்டில் கழிவுகளைத் தலையில் சுமக்க வேண்டிய அவல நிலை தொடரக் கூடாது என்று பிரதமர் மோடி கூறினார்.
அகில இந்திய வானோலியில் ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பான பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி நிகழ்த்திய உரையில், "கடந்த நாட்களில், 2 மகத்தான செயல்களைச் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. நாம் பாபாசாஹேப் அம்பேத்கரின் 125ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடி வருகிறோம். பல ஆண்டுகளாகவே, மும்பையில் அவருக்கென்று ஒரு நினைவுச் சின்னம் அமைக்கும் நிலம் தொடர்பான விவாதம் நடைபெற்று வந்தது. ஆனால் பாபா சாகேப் அம்பேத்கரின் நினைவுச் சின்னம் அமைக்கத் தேவையான நிலத்தை அளிக்க பாரத அரசு முடிவெடுத்திருக்கிறது என்பதை நிறைவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இதே போல, உலகம் முழுமைக்கும் இந்த மாமனிதர் பற்றித் தெரிய வேண்டும், அவரது எண்ணங்கள் பற்றி அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும், அவரது செயல்களை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக புது தில்லியில் பாபா சாஹேப் அம்பேத்கரின் பெயரில் ஒரு சர்வதேச மையம் அமைக்கப்பட வேண்டும் என்ற விஷயம் கூட பல ஆண்டுகளாகவே தீர்மானிக்கப்படாத ஒன்றாகவே இருந்து வந்தது. இதையும் கூட நாம் நிறைவேற்றி இருக்கிறோம், இந்த மையத்துக்கான அடிக்கல்லை நாட்டி இருக்கிறோம். 20 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத ஒன்றை இருபதே மாதங்களுக்கு உள்ளாக நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியைப் பூண்டிருக்கிறோம்.
எனது மனதில் வேறு ஒரு சிந்தனையும் எழுகிறது. இன்றும் கூட தங்கள் தலைகளில் கழிவுகளைச் சுமக்கும் குடும்பங்கள் இந்தியாவில் இருக்கின்றதே, இந்த நிலையை நீட்டிப்பது நமக்கு அழகா? பாபா சாஹேப் அம்பேத்கரின் 125ம் ஆண்டைக் கொண்டாடும் இந்த உன்னதமான கால கட்டத்தில், இனியும் நம் நாட்டில் இப்படிக் கழிவுகளைத் தலையில் சுமக்க வேண்டிய அவல நிலை தொடரக் கூடாது என்று நான் அரசுத் துறைகளிடம் வலியுறுத்திக் கூறினேன். இதை இனிமேலும் நாம் பொறுத்துக் கொள்ள முடியாது. இதில் சமூகத்தின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. அரசும் இதில் தனது கடமையை ஆற்ற வேண்டும்.
எனக்கு இதில் மக்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. இந்தப் பணியை நாம் செய்தாக வேண்டும். பாபா சாஹேப் அம்பேத்கர் கல்வி கற்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார். இன்றும் கூட நமது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மத்தியில், குறிப்பாக பெண்கள் மத்தியில் கல்வி சென்று சேரவில்லை. பாபா சாஹேப் அம்பேத்கரின் 125ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, நமது கிராமங்களிலும், நகரங்களிலும், நாம் வசிக்கும் பகுதிகளிலும், ஏழையின் எந்த ஒரு குழந்தையும் கல்வியறிவு இல்லாது இருக்கக் கூடாது என்பதை நாம் உறுதி செய்து கொள்வோம். அரசு தன் கடமையை ஆற்ற வேண்டும், சமுதாயம் இதில் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இப்படிச் செய்தால் நம்மால் கண்டிப்பாக சாதிக்க முடியும்" என்றார் மோடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT