Published : 15 Apr 2015 01:44 PM
Last Updated : 15 Apr 2015 01:44 PM
*
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராவது தொடர்பாக க.அன்பழகன் தொடர்ந்து மனு வேறு பெரிய அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இரு நீதிபதிகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக மனு பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவானிசிங்கை நீக்கக்கோரும் திமுகவின் மனு இன்று பிற்பகல் 1.05 மணிக்கு விசாரணைக்கு வந்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது இரு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்தை தெரிவித்தனர். க.அன்பழகன் மனுவை ஏற்க நீதிபதி மதன் பி.லோகுர் சம்மதம் தெரிவித்தார்.
நீதிபதி லோகூர் மேலும் கூறும்போது, "பவானி சிங் அரசு வழக்கறிஞராக தொடர அனுமதித்தால் அது கிரிமினல் வழக்கு நீதி வழங்கும் முறைக்கு கிடைத்த தோல்வியாகும். மேல்முறையீட்டு மனு விசாரணை முழுவதும் அதிகார பலத்தால் சிதைக்கப்பட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கு 15 ஆண்டுகள் நடைபெற்றது என்பதே நாட்டில் நீதி வழங்கும் முறையில் அதிகாரம் படைத்தவர்கள் தலையீடு எவ்வளவு வலுவாக இருக்கிறது என்பதற்கு ஒரு சான்று. எனவே, பவானி சிங், ஜெயலலிதா மேல்முறையீட்டு மனுவில் அரசு தரப்பில் தொடர்ந்து ஆஜராவது உகந்தது அல்ல" என்றார்.
ஆனால், நீதிபதி பானுமதியோ பவானி சிங் இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக தொடர முழு அதிகாரமும் இருக்கிறது என்றார்.
இரு நீதிபதிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வழக்கு விசாரணை 3 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 11-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.
இந்நிலையில் ஜெயலலிதா வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜரான பவானிசிங்கின் நிய மனத்தில் குளறுபடி நடந்துள்ளது. இவ்வழக்கில் பவானிசிங் ஆஜரானது சட்டப்படி செல்லாது. எனவே அவரை நீக்க வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பை 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மேலும் பவானிசிங் நியமனம் தொடர்பான மனுவில் தீர்ப்பு வெளியாகும் வரை கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவின் வழக்கில் தீர்ப்பு வழங்க தடை விதித்து உத்தரவிட்டது.
இதனால் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு எழுதும் பணிகள் நிறைவடைந்தும் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. இதனிடையே கர்நாடக உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி டி.ஹெச்.வகேலா சில நாட்களுக்கு முன்னர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இத்தகைய சூழலில் இன்று விசாரணைக்கு வந்த திமுக மனு வேறொரு பேரமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
தீர்ப்பு எப்போது?
கர்நாடக உயர் நீதிமன்றம் சிறப்பு அமர்வில் உள்ள மேல்முறையீட்டு மனு தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக 'தி இந்து'வுக்கு பேட்டியளித்த கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் படேல், "ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு வழங்க கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு விதித்த தடை நீக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் இருந்து எந்த ஒரு எழுத்துப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. தீர்ப்பு நகல் வந்த பிறகே இவ்விவகாரத்தில் அடுத்த கட்ட நிலவரம் தெரியவரும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT