Published : 17 Apr 2015 08:19 AM
Last Updated : 17 Apr 2015 08:19 AM

ஆண்டுக்கு 100 நாள் சேலை அணியும் திட்டம்: பல்லாயிரக்கணக்கான பெண்கள் உறுதிமொழி

சேலை அணிவதை எல்லா பெண்களுமே விரும்புகின்றனர். ஆனால் காலத்தின் மாற்றத்தால் வேலைக்குச் செல்லும் பெண்கள் சுடிதார், ஜீன்ஸ், குர்தா, மிடி, டாஸ் என நவநாகரிக உடைக்கு மாறி வருகின்றனர்.

இந்த காலகட்டத்தில் இந்தியாவின் பாரம்பரியத்தை காக்கும் வகையில் பெண்கள் சேலை அணிவதை ஊக்குவிக்க பெங்களூரை சேர்ந்த அலி மேத்தன், அஞ்சு காதம் ஆகியோர் இணைந்து புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இருவரும் இணைந்து ட்விட்டர், பேஸ்புக் ஆகிய சமூக வலைத்தளங்களில் hashtag #100sareepact என்ற தலைப்பில் ஹேஸ்டாக்கை உருவாக்கினர். மேலும் 100sareepact.com என்ற பெயரில் இணையதளத்தையும் ஏற்படுத்தினர்.

ஓராண்டில் 100 நாட்கள் சேலை அணிய வேண்டும். இதுதான் அலி மேத்தன், அஞ்சு காதம் மேற்கொண்டுள்ள உறுதிமொழி. இப்போது அவர்களைப் பின்பற்றி இணையதளத்தில் பல்லாயிரக்கணக்கான பெண்கள், 100 நாட்கள் கண்டிப்பாக சேலை அணிவேன் என்று உறுதிமொழி மேற்கொண்டு வருகின்றனர்.

ஒவ்வொரு பெண்ணும் சேலை கட்டிய புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு அந்தச் சேலை குறித்த பின்னணி கதையையும் சுவாரசியமாக விவரித்துள்ளனர். மிக நீளமான அந்தப் பட்டியலில் ஒவ்வொரு சேலையும் ஒவ்வொரு கதையை கூறுகிறது.

ஸ்மிதா திரிபாதி என்பவர் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள கட்டுரையில், இச்சேலையை எனது 6 வயது மகன் ஆர்யான் தேர்வு செய்தான், இதனால் இது எனக்கு மிகவும் பிடித்தமானது என்று கூறியுள்ளார்.

சாப்ட்வேர் இன்ஜினீயர் வித்யா ராமமூர்த்தி, கருப்பு மற்றும் தங்க நிறத்தில் சேலை அணிந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார், அவரது பதிவில், எனது சொந்த உழைப்பில் வாங்கிய சேலைகள், அதனால் அவற்றை அதிகம் விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இளம்பெண்கள் முதல் வயதானவர்கள் வரை ஏராளமான பெண்கள் சேலை கட்டிய தங்களின் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து புதிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம்தான் அலி மேத்தனும் அஞ்சு காதமும் 100 நாள் சேலை உறுதிமொழியை மேற்கொண்டு அதை இணையத்தில் வெளியிட்டனர். இப்போது அந்தப் பிரச்சாரம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x