Last Updated : 09 Apr, 2015 06:42 PM

 

Published : 09 Apr 2015 06:42 PM
Last Updated : 09 Apr 2015 06:42 PM

சமூக முன்னேற்றத்தில் நேபாளத்துக்கும் கீழே இந்தியா

சமூக வளர்ச்சிக் குறியீட்டில் நேபாளத்தை விட இந்தியா பின் தங்கியுள்ளது. நார்வே நாட்டுக்கு முதலிடம். அமெரிக்கா 16-வது இடத்தில் உள்ளது.

ஆரோக்கியம், சுகாதாரம், நீராதாரம், தனிநபர் பாதுகாப்பு, வாய்ப்புகளை அடைவதற்கான வழிமுறைகள், சகிப்புத் தன்மை, தனிமனித சுதந்திரம், தெரிவு ஆகியவற்றை அளவுகோல்களாகக் கொண்டு 133 நாடுகளின் நிலவரம் ஆராயப்பட்டுள்ளது.

இதில் இந்தியா 101-வது இடத்தில் உள்ளது. நார்வே முதலிடம், ஸ்வீடன் 2-ம் இடம், சுவிட்சர்லாந்து 3-ம் இடம், ஐஸ்லாந்து 4-ம் இடம், நியூஸிலாந்து 5-ம் இடம்.

சமுதாய வளர்சிக் குறியீட்டில் வங்கதேசம் மற்றும் நேபாளம் இந்தியாவை விட நல்ல நிலையில் உள்ளதாக இந்த குறியீடு தெரிவிக்கிறது.

சகிப்புத் தன்மை மற்றும் உள்ளடக்கிய கொள்கை ஆகிய அளவுகோலில் இந்தியா 128-வது இடத்தில் உள்ளது. சுகாதாரம் மற்றும் நல்வாழ்க்கை முறை என்ற அளவுகோலில் இந்தியா 120-வது இடத்தில் உள்ளது. ஆனால் இந்த இரண்டு அளவுகோலிலும் சிறப்புறுவது கடினம் என்று சோஷியல் புராக்ரஸ் இண்டெக்ஸ் இயக்குநர் மைக்கேல் கிரீன் கூறுகிறார்.

அவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு தொலைபேசி பேட்டியில் தெரிவிக்கும் போது, “ஒரு நாடு செல்வச்செழிப்பில் இருக்கும் போது சுகாதாரம், நீராதாரம் ஆகியவை சுலபமாக அமையும். ஆனால் காற்றில் மாசு, உடல் பருமன் ஆகியவற்றில் சவால்கள் இருக்கும். அமெரிக்கா ஆரோக்கியத்துக்காக பெரிய அளவில் செலவிட்டாலும் அந்த நாடு இந்த விஷயத்தில் 68-வது இடத்திலேயே உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை சகிப்புத் தன்மை மற்றும் உள்ளடக்கிய கொள்கை விவகாரத்தில் மிக மோசமான நிலவரமே உள்ளது. பலதரப்பட்ட மக்களும் வசிக்கும் ஒரு நாட்டில் இது பெரிய சவால்தான். இன்னொரு விஷயம் இந்தியாவை பொறுத்தவரையில் நான் பார்த்தவரை வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் போது இந்தியாவிலும் உடல்பருமன் ஒரு பெரிய சவாலாக மாறும்.

சமூக வளர்ச்சிக் குறியீட்டில் வளர்ந்த நாடுகள் சிறப்பாக இருப்பதற்கு ஓரளவுக்கு அதன் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியுஜ்ம் ஒரு காரணமாகும். ஆனால் இதுவே முழுமையாகிவிடாது. ஜிடிபி-க்கும் சமூக வளர்ச்சிக்கும் இடையே தொடர்பு இருந்தாலும், துல்லியமாக ஒன்றன் வளர்ச்சிக்கு இணையாக மற்றது வளர்ச்சியடைய வாய்ப்பில்லை. எனவே ஜிடிபி முறை இந்த ஆய்வுக்கு ஓரளவே சரிவரும்.

ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி என்ற கருத்தாக்கம் 1930-களில் பொருளாதார அறிஞர் சைமன் குஸ்நெட்ஸ் என்பவரால் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அப்போதே அவர், ‘ஒரு தேசத்தின் வருவாயை வைத்து அந்த நாட்டின் நலன்களை நாம் அனுமானிக்க முடியாது’ என்று எச்சரித்தார்.” என்கிறார் கிரீன்,.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x