Published : 26 Apr 2015 08:44 AM
Last Updated : 26 Apr 2015 08:44 AM
நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டதால் அந்நகருக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.
நேபாளத்தின் மத்தியப் பகுதியில் நேற்று 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் தலைநகர் காத்மாண்டுவில் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் காத்மாண்டு விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்பட்டது.
இந்தியாவில் இருந்து ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் காத்மாண்டுவுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் விமான நிலையம் மூடப்பட்டதால் இந்தியாவில் இருந்து அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. நேபாள விமானப் போக்குவரத்து அதிகாரிகள் அனுமதி அளித்த பிறகே மீண்டும் விமானங்கள் இயக்கப்படும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “ஏர் இந்தியா சார்பில் காத்மாண்டுவுக்கு 3 விமானங்கள் இயக்கப்படுகின்றன. நேற்று காலை டெல்லியில் இருந்து செல்லும் விமானம் மட்டும் வழக்கப்படி இயக்கப்பட்டது. டெல்லியில் இருந்து செல்லும் மற்றொரு விமானம், கொல்கத்தாவில் இருந்து செல்லும் விமானம் ஆகியவற்றின் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளோம். காத்மாண்டுவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதி கிடைத்தவுடன் அங்கு மீண்டும் விமானங்களை இயக்குவோம்” என்றார்.
ஜெட் ஏர்வேஸ் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “எங்கள் விமானம் காத்மாண்டு செல்லும் வழியில் லக்னோவுக்கு திருப்பி விடப்பட்டது. இந்த விமானம் மீண்டும் மும்பை வந்துசேரும். டெல்லியில் இருந்து செல்லும் மற்றொரு விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது” என்றார்.
ஸ்பைஸ் ஜெட் அதிகாரி ஒருவர் கூறும்போது, “விமான சேவைகளை நாங்கள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம். மீண்டும் அனுமதி கிடைத்தவுடன் நிவாரணப் பொருள்களை கட்டணமின்றி எடுத்துச்செல்ல தயாராக இருக்கிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT