Published : 09 Apr 2015 12:29 PM
Last Updated : 09 Apr 2015 12:29 PM
1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் 123 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் 100 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.
முக்கிய குற்றவாளிகளான தாவூத் இப்ராஹிம், டைகர் மேமன் இருவரும் பாகிஸ்தானில் பதுங்கியதால் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். டைகர் மேமனின் தம்பி யாகூப் மேமன் உள்பட 12 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. யாகூப் மேமனின் தூக்கு தண்டனை உச்ச நீதிமன்றத்திலும் உறுதி செய்யப்பட்டது.
தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்துவிட்டார். இதையடுத்து, தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி யாகூப் மேமன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், 'ஆயுள் தண்டனைக்காலம் 14 ஆண்டுகள்தான். நான் 20 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டேன். எனவே தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, தூக்கு தண்டனையை மறு சீராய்வு செய்யக் கோரும் யாகூப் மேமன் மனுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மகாராஷ்டிர சிறப்புப் புலனாய்வுப் பிரிவு மற்றும் சிபிஐ தரப்பு ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டன.
இந்த நிலையில், தூக்கு தண்டனையை மறு சீராய்வு செய்யக் கோரும் யாகூப் மேமன் மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனில் தேவே தலைமையிலான அமர்வு இன்று (வியாழக்கிழமை) தள்ளுபடி செய்தது.
மேமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கான எந்தத் தகுதியும் இந்த வழக்கில் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT