Published : 06 Apr 2015 12:44 PM
Last Updated : 06 Apr 2015 12:44 PM
ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பங்கேற்றதால் நான் அந்த இயக்கத்துக்கு ஆதரவான நபராக இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை என விப்ரோ நிறுவனத் தலைவர் அஸிம் பிரேம்ஜி விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தொண்டு நிறுவனம் சார்பில் இன்று (திங்கட்கிழமை) நடந்த விழாவுக்கு விப்ரோ நிறுவன தலைவர் அஸிம் பிரேம்ஜி சிறப்பு அழைப்பாளராக சென்றிருந்தார்.
அவருக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அழைப்பு விடுத்திருந்தார். ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் அஸிம் பிரேம்ஜி பங்கேற்றது சலசலப்பை ஏற்படுத்தியதோடு வியக்கத்தக்கதாகவும் பார்க்கப்பட்டது.
இது தொடர்பாக, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அஸிம் பிரேம்ஜி மீது கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டன.
அதேவேளையில், இந்த விவகாரத்துக்கு விளக்கம் தரும் வகையில், ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி கூட்டத்திலேயே அவர் பேசும்போது, "எனது பங்கேற்பு பலரால் விரும்பத்தகாத ஒன்றாக பேசப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பங்கேற்பதால் நான் அவர்களது கொள்கைகளை பரப்புவதற்கு வந்திருப்பதுப் போல பேசுகிறார்கள்.
எனக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த நாட்டை நான் நேசிக்கிறேன். மனிதநேய உதவிகளை அளிக்கும் அமைப்பின் நிகழ்ச்சி என்ற காரணத்தால் மட்டுமே நான் இதில் பங்கேற்றேன். நான் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் இல்லை" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT