Published : 19 Apr 2015 02:43 PM
Last Updated : 19 Apr 2015 02:43 PM
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலராக கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி ஞாயிற்றுக்கிழமை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
பொலிட்பீரோ உறுப்பினராக தமிழக மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-வது அகில இந்திய மாநாடு கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்றது. கடைசி நாளான நேற்று மத்திய கமிட்டிக்கு 91 உறுப்பினர்களும் பொலிட்பீரோ அமைப்புக்கு 16 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய பொதுச்செயலர் பதவிக்கு சீதாராம் யெச்சூரியின் பெயரை பதவியில் இருந்து விடைபெற்ற பிரகாஷ் காரத் முன்மொழிந்தார். கட்சியின் மூத்த தலைவர் எஸ். ராமச்சந்திரபிள்ளை அதனை வழிமொழிந்தார். இதைத் தொடர்ந்து சீதாராம் யெச்சூரி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
புதிய பொலிட்பீரோவில் சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், எஸ்.ராமச்சந்திர பிள்ளை, பிமன் பாசு, மாணிக் சர்க்கார்,பினராயி விஜயன், பி.வி.ராகவலு, கொடியேறி பாலகிருஷ்ணன், எம்.ஏ.பேபி, சூர்ய காந்த மிஸ்ரா, ஏ.கே.பத்மநாபன், பிருந்தா காரத், மொஹமத் சலீம், சுபாஷினி அலி, ஹன்னன் மொல்லா, ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேற்குவங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் ஆகியோர் மத்திய கமிட்டியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் சங்கத்தின் மூத்த தலைவர் கே.வரதராஜன் பொலிட்பீரோவில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
மாநாட்டில் சீதாராராம் யெச்சூரி பேசியபோது, இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை பலப்படுத்துவதுதான் எனது தலையாய பணி என்று தெரிவித்தார். மோடி அரசின் கொள்கைகளையும் இந்துத்துவா சக்திகளின் மதவெறி திட்டங்களையும் எதிர்ப்பதுதான் கட்சியின் முதல் பணி. இருப்பினும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேரமாட்டோம் என்று மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
படிப்படியாக உயர்ந்த சீதாராம் யெச்சூரி
சீதாராம் யெச்சூரி | கோப்புப் படம்: நகர கோபால்
1952-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம்தேதி பிறந்த யெச்சூரி ஹைதராபாதில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் டெல்லியில் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரப் பட்டம் பெற்றார். படிப்பில் கெட்டிக்காரரான யெச்சூரி, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். நெருக்கடி நிலை காலத்தில் கைது செய்யப்பட்டதால் முனைவர் பட்டப்படிப்பை அவரால் முடிக்க இயலாமல்போனது.
சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராக 3 முறை பதவி வகித்தார்.
1985-ல் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக தேர்வானார். 1992-ல் பொலிட்பீரோவில் இணைந்தார். 2005 ஜூலையில் மாநிலங்களவைக்குத் தேர்வானார்.
62 வயதாகும் யெச்சூரி அரசியலில் பழுத்த அனுபவமும் திறனும் மிக்கவர். அரசியலில் நிறைய நண்பர்களை பெற்றவர். மறைந்த தலைவர் ஹர்கிஷண் சிங் சுர்ஜித்தின் பாதையில் செல்பவர். வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சி அமைவதிலும் 1996-97-ல் ஐக்கிய முன்னணி கூட்டணி அரசு அமைவதிலும் பெரும்பங்கு ஆற்றியவர் சுர்ஜித் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT