Last Updated : 07 Apr, 2015 08:32 AM

 

Published : 07 Apr 2015 08:32 AM
Last Updated : 07 Apr 2015 08:32 AM

முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஸ்கார்பினி நீர்மூழ்கி சோதனை ஓட்டம்

நாட்டில் முதல்முறையாக முழு வதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்கார்பினி நீர்மூழ்கி கப்பலின் சோதனை ஓட்டம் மும்பையில் நேற்று நடத்தப்பட்டது.

இந்திய கடற்படையில் தற்போது 14 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. அவற்றில் 10 நீர்மூழ்கிகள் ரஷ்யாவிடம் இருந்தும் 4 நீர்மூழ்கிகள் ஜெர்மனியிடம் இருந்தும் வாங்கப்பட்டவை. அவை அனைத்தும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளன.

மிகவும் பழமையான அந்த நீர்மூழ்கி கப்பல்களில் அடிக்கடி தொழில் நுட்ப கோளாறுகளும் விபத்துகளும் நேரிடுகின்றன. எனவே அவற்றுக்கு மாற்றாக அதிநவீன நீர்மூழ்கிகளை கடற்படையில் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக பிரான்ஸ் நாட்டின் ஒத்துழைப்புடன் மும்பை கப்பல் கட்டுமான தளத்தில் 6 ஸ்கார்பினி நீர்மூழ்கிகளை தயாரிக்க திட்டமிடப்பட்டது. அங்கு கடந்த 2005-ம் ஆண்டு முதல் கப்பல் கட்டும் பணி நடைபெற்று வந்தது.

ஆனால் மிக நீண்ட காலமாக இப்பணிகள் இழுத்தடிக்கப்பட்டு வந்தன. வெளிநாடுகளில் இருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்ய வேண்டியிருந்ததால் கால தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படு கிறது.

சோதனை ஓட்டம்

இந்நிலையில் முதல் ஸ்கார்பினி நீர்மூழ்கியின் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து நேற்று கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டது.

மும்பை கப்பல் கட்டுமான தளத்தில் நடைபெற்ற விழாவுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமை வகித்து சோதனை ஓட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப் பட்ட முதல் நீர்மூழ்கி கப்பலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு வரும் 2016-ம் ஆண்டில் இந்த நீர்மூழ்கி கப்பல் கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது.

67 மீட்டர் நீளம், 1,750 டன் எடை கொண்ட ஸ்கார்பினி நீர்மூழ்கியில் 31 வீரர்கள் வரை பணியாற்ற முடியும். கடலுக்கு அடியில் இருந்து கடலின் மேற்பரப்பில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்க முடியும். மேலும் கடலுக்கு உள்ளேயே எதிரிகளின் நீர்மூழ்கிகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறனும் ஸ்கார்பினிக்கு உள்ளது.

இன்னும் ஒன்பது மாதங்களில் இரண்டாவது ஸ்கார்பினி நீர்மூழ்கி தயாராகிவிடும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 6 ஸ்கார்பினி நீர்மூழ்கிகளும் கடற்படையில் சேர்க்கப்பட்டுவிடும். அவற்றுக்கு ரூ.23 ஆயிரம் கோடி செலவாகும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் மேலும் 6 ஸ்கார்பினி நீர்மூழ்கிகளை உள்நாட்டில் தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. வரும் 2022-ம் ஆண்டுக்குள் இந்திய கடற்படை யில் மொத்தம் 30 நீர்மூழ்கிகளை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x