Published : 16 Apr 2015 12:32 PM
Last Updated : 16 Apr 2015 12:32 PM
அணு ஆயுதங்களை ஏந்தி 3000 கி.மீ. தூரம் பாய்ந்து இலக்கை தாக்கும் அக்னி-3 ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்திய ராணுவத்தில் அக்னி ரக ஏவுகணைகள் தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் அணு ஆயுதங் களை ஏந்தி சென்று இலக்கை தாக்கும் அக்னி-3 ஏவுகணை நேற்று சோதனை செய்து பார்க்கப்பட்டது. ஒடிஸா மாநிலம் வீலர் தீவு கடற் கரை பகுதியில் இந்த சோதனை நடந்தது. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை தரையில் இருந்து பாய்ந்து சென்று தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்க வல்லது.
மொபைல் லாஞ்சர் மூலம் காலை 9.55 மணிக்கு அக்னி-3 ஏவுகணை சோதனை செய்து பார்க்கப்பட்டது என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளது என்று செய்தியாளர்களிடம் சோதனை மைய இயக்குனர் எம்.வி.கே.வி.பிரசாத் தெரிவித்தார். இந்த அக்னி-3 ஏவுகணை 17 மீட்டர் நீளம் கொண்டது. 2 மீட்டர் சுற்றளவு உடைய இந்த ஏவுகணையின் எடை 50 டன்கள். மேலும் 1.5 டன் எடையுள்ள அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் திறன் படைத்தது என்று அவர் தெரிவித்தார். இந்த ஏவகணை ஏற்கெனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அதை இன்னும் மேம்படுத்தப்பட்ட நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
அக்னி-3 ரக ஏவுகணை ஏற்கெனவே கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி பரிசோதித்து பார்க்கப்பட்டது. எனினும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதன்பின், 2007 ஏப்ரல் 12, 2008 மே 7, 2010, 2012 செப்டம்பர் 21, 2013 டிசம்பர் 23 ஆகிய தேதிகளில் வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT