Published : 18 Apr 2015 08:15 AM
Last Updated : 18 Apr 2015 08:15 AM
நெட்நியூட்ராலிட்டி விவகாரத் தில் ப்ளிப்கார்ட் நிறுவனம் தடாலடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தது. அது அந்தர்பல்டியாக இருந்தாலும் நெட்டிசன்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்துள்ளது. ஆனால் இதையும்கூட ‘’உலக நடிப்புடா சாமீ’’ என்கிறார்கள் நெட்டிசன்கள். ஏனென்றால் ஏர்டெல் ஜீரோ திட்டத்தில் முதலில் சேர்ந்ததே பிளிப்கார்ட்தான்.
மவுஸ் புரட்சியாளர்கள் கடுமையாக எதிர்ப்பை காட்டிவந்தாலும் ஏர்டெல் தன்னுடைய ‘’ஏர்டெல் ஜீரோ’’ திட்டம் அற்புதமானது என்று இப்போதும் சொல்லிக் கொண்டேயிருக்கிறது.
நெட் நியூட்ராலிட்டி என்கிற சொற் களை இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்புவரை பெரும்பாலான இந்தியர் களுக்கு தெரியாது. ஆனால் சிலியில் 2010-லேயே இதற்காக போராடி சட்டமெல்லாம் கொண்டு வந்து விட்டார்கள். அமெரிக்கா கூட இதில் தாமதம்தான். சென்ற ஆண்டுதான் அங்கே போராட்டங்கள் தொடங்கி ஒரளவு சுமுகமான முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தியாவில் இப்போது தான் தொடங்கியிருக்கிறது இந்த பார பட்சமற்ற இணையத்திற்கான போர்!
இன்று மொபைலிலும் டேப்களிலும் கணினியிலும் விதவிதமான இணைய தளங்களையும் சமூக வலைதளங் களையும் பயன்படுத்தி விருப்பப்படி உலவுகிறோம். இணைய சேவை வழங்கும் (ISP) தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குறிப்பிட்ட சில இணைய தளங்களை பார்க்க மட்டும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதில்லை. எந்த ஒரு இணையதளத்திற்கும் தனியாக அதிக வேகமோ அல்லது குறைந்த வேகமோ வழங்குவதில்லை. சிறப்பு சலுகைகள் கிடையாது. இணையத்தில் எல்லாமே பாகுபாடின்றி ஒரே வேகத்தில் ஒரே கட்டணத்தில்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. எந்த இணையதளத்தையும் பார்ப்பதையோ உலவுவதையோ கட்டுபடுத்துவது மில்லை. இதுதான் நெட் நியூட்ராலிட்டி.
நெட் நியூட்ராலிட்டி இல்லாமல் போனால் இந்த டெலிகாம் நிறுவனங்கள் ஒவ்வொரு இணையதளத்திற்கும் தனித்தனியாக கட்டணம் வசூலிக்கும். வாட்ஸ் அப் மட்டும் அதிக வேகத்தில் இயங்க கூடுதலாக பத்து ரூபாய், ஜிமெயிலின் வேகத்தை அதிகரிக்க முப்பது ரூபாய் என்பது மாதிரி. யூடியூபில் எச்டி வீடியோ பார்க்க வேண்டுமா அதற்கு தனிக்கட்டணம். ப்ளிப்கார்ட்டில் ஆபர் போட்டால் முதல் ஆளாக முந்திக்கொண்டு புக் பண்ணவேண்டுமா அந்த இணைய தளத்திற்கு மட்டும் சலுகை விலையில் சூப்பர் ஸ்பீடு! வாட்ஸ் அப் காலிங்கிற்கு தனிக் கட்டணம். வைபருக்கு தனிக் கட்டணம் என இப்படி நீட்டிக் கொண்டே செல்வார்கள். டிடிஹெச்சில் குறிப்பிட்ட சானல்களுக்கு மட்டும் தனிக்கட்டணம் வசூலிக்கிற அதே தந்திரத்தை இணையம் வரைக்கும் நீட்டிக்கத்தான் திட்டமிடுகின்றன தொலைத்தொடர்பு நிறுவனங்கள்.
அப்படி நடந்துவிட்டால் அதற்கு பிறகு இணையம் எப்போதும் இலவசமாகவும், பாரபட்சமின்றியும் இருக்காது. நாம் பயன்படுத்துகிற முறையும் அதற்காக செலவழிக்கிற தொகையும் முற்றிலும் வேறமாதிரி ஆகிவிடும். அதனால்தான் இந்தியா முழுக்க இணையவாசிகள் நெட்நியூட்ராலிட்டியை பாதுகாக்க கோரி விதவிதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏர்டெல் நிறுவனம் சென்ற வாரத்தில் ஏர்டெல் ஜீரோ என்கிற புதிய திட்டத்தை வெளியிட்டது. இந்த ஏர்டெல் ஜீரோ திட்டத்தில் ஒரு நிறுவனத்தின் ஆப்ஸை பயன்படுத்தும் போது அதற்குரிய கட்டணத்தை வாடிக்கையாளரிடமிருந்து வசூலிக் காமல் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஏர்டெல் வசூலித்துக்கொள்ளும். இதனால் வாடிக்கையாளரான நமக்கு லாபம்தான். டேட்டாவும் மிச்சமாகும்.
உதாரணமாக பிளிப்கார்ட் இணையதளத்தை அல்லது செயலியை (APP) நீங்கள் உங்களுடைய மொபைலில் பயன்படுத்தும்போது அதற்காக பணம் தர வேண்டாம். அந்த சமயத்தில் நீங்கள் பயன்படுத்தும் டேட்டா எல்லாமே இலவசம்தான். இலவசம் என்றதும் நமக்கு கொண்டாட்ட மாகத்தான் இருக்கும். இதுக்கு ஏன் எதிர்ப்பு என்றும் நினைக்கலாம்.
சில நாட்களுக்கு முன்பு பேஸ்புக் நிறுவனமும் சில இனையதளங்களை இலவசமாக வழங்குவதாக அறிவித்தது. இதற்கு இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனத்தோடு கூட்டு அமைத்தது. ரிலையன்ஸ் வாடிக்கை யாளர்களுக்கு இன்டெர்நெட் ஓஆர்ஜி மூலம் பேஸ்புக் உள்ளிட்ட சில இணைய தளங்களை இதன்மூலம் இலவசமாக பயன்படுத்தலாம். இப்படிப்பட்ட அறிவிப்புகளுக்கு பின்னால் சூழ்ச்சியும் சூதும் இருக்கும் என்பதை யோசிக்க வேண்டும். இலவச மாக எந்த ஒன்றையும் எந்த நிறு வனமும் வாடிக்கையாளருக்கு தூக்கிக் கொடுத்து விடாது.
இதில் என்ன சூது? என்கிறீர் களா இப்படி இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்லுகிற இணையதளங்களை முற்றிலும் இலவசமாக பயன்படுத்தமுடியாது. அதில் உள்ள எழுத்துவடிவ விஷயங் களுக்கும் மட்டும்தான் இலவசம். படங்கள் பகிர, வீடியோ பார்க்க தனியாக காசு கொடுக்க வேண்டும் என்று ஸ்டார் போடுவார்கள்! நிபந் தனைக்கு உட்பட்ட இப்படியான * # ஆபர்கள் நாம் அறியாததா என்ன?
அதாவது இட்லி இலவசம் ஆனால் சட்னிக்கு தனியாக சாம்பாருக்கு தனியாக பொடிக்கு தனியாக காசு கொடுக்க வேண்டியிருக்கும். ஏர்டெல் ஜீரோ அப்படிப்பட்ட ஒரு நடைமுறைக்கான முதல் படி. முதலில் இலவசத்தை கொடுத்து பிறகு நாம் அதிகம் பயன்படுத்தும் தளங்களுக்கு தனிக்கட்டணம் விதிப்பது. அதனால்தான் ஆளாளுக்கு கொதிக்கிறார்கள்.
ஏர்டெல் நிறுவனத்தின் சென்ற ஆண்டின் (2014) ஒட்டுமொத்த வருவாயில் 5.5% எஸ்எம்எஸ் சேவை வழியாக கிடைத்துள்ளது. ஆனால் இது அதற்கு முந்தைய ஆண்டின் வருமானத்தை காட்டிலும் கணிசமாக குறைந்துள்ளது. இதற்கு காரணம் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கின் வரவு. விழாக்காலங்களில் குறுஞ்செய்தி அனுப்ப கூடுதல் கட்டணம் வசூலித்துக் கொண்டிருந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இது நெருக்கடியை கொடுத்து வருகிறது.
மேலும் ஸ்கைப், வைபர் முதலான சேவைகளின் வழி பேசுவதை கட்டுப்படுத்த வேண்டும், அவர்களுடைய அழைப்புகளை கண்காணிக்க வேண்டும், எங்களுக்கு இருக்கிற விதிமுறைகளை அவர்களும் பின்பற்ற வேண்டும் என்கிற கோரிக்கை களை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பான டிராய்க்கு தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றன.
‘கடந்த ஓர் ஆண்டில் மட்டும் தொலைதொடர்பு நிறுவனங்கள் எஸ்எம்எஸ் மூலம் கிடைக்கும் வருவாயில் 42 சதவீதத்தையும், செல் போன் அழைப்புகள் மூலம் கிடைத்த வருவாயில் 19 சதவீதத்தையும் இழந்துள்ளன. இதை இப்படியே விட்டால் இந்த OTT தளங்களால் அடுத்த ஐந்தாண்டுகளில் 24 ஆயிரம் கோடிகளை நம்முடைய தொலை தொடர்பு நிறுவனங்கள் இழக்க வேண்டியிருக்கும்’’ என்று கோபமாக பேசியிருக்கிறார் ராஜன் மேத்யூஸ். இவர் யார் தெரியுமா? செல்லுலார் ஆபரேட்டர்கள் அசோசியேஷனின் (COAI) இயக்குனர். (OTT தளங்கள் என்பவை over the top players, ஸ்கைப், வாட்ஸ் அப், வைபர் மாதிரியானவை)
இப்படிப்பட்ட நிலையில் கஷ்ட ஜீவிதத்தில் இருக்கும் இந்த டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் இந்த இணைய சுதந்திரத்தை எப்படி யாவது காலி பண்ணிவிட துடிக்கின்றன.
தடுக்க என்ன செய்யலாம்?
டெலிகாம் நிறுவனங்களை கட்டுப் படுத்தும் அமைப்பான டிராய் (TRAI) இந்த விவகாரத்தில் மக்களின் கருத்துகளை அறிந்துகொள்ள ஆர்வ மாக இருக்கிறது. இதற்காக இருபது கேள்விகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதை படித்து உங்கள் கருத்துகளை டிராயிக்கு தெரிவித்து நெட்நியூட்ரா லிட்டியை கட்டிக்காக்கலாம். இதற்கு கடைசி நாள் ஏப்ரல் 24. அதற்குள்ளாக கொடுத் தால்தான் ஏதாவது செய்ய முடியும்.
இணையவாசிகள் சோம்பேறிகள் என்பது தெரிந்த சகசோம்பேறி ஒருவர் டிராயிக்கு லெட்டர் போடவே தனியாக ஓர் இணைய தளத்தை தொடங்கியுள்ளார். 20 கேள்விகளை நூறுபக்கத்துக்கு கொடுத்தால் யாரால் படிக்க முடியும்? எப்படி பதில் போட முடியும். அதனால்http://www.savetheinternet.inஎன்கிற இணைய தளத்துக்கு சென்று ஒரு பட்டனை தட்டினால் டிராய்க்கு என்ன பதில் அனுப்பவேண்டுமோ அதை மொத்த மாக டைப் செய்து வைத்திருக் கிறார்கள். அதை காப்பி பேஸ்ட் பண்ணி டிராயின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டியதுதான். இதுவரை மூன்று லட்சம் பேருக்கு மேல் ட்ராய்க்கு மின்னஞ்சல் போட்டிருக்கிறார்கள். நீங்களும் போடுங்கள்.
ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் ஆதரவு
இணைய சமஉரிமைக்கு ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் ஆதரவுக்குரல் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தொலைத்தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையத்துக்கு (டிராய்) எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இணையதளத்தின் இன்றைய பயன்பாடு ஏழை முதல் பணக்காரர் வரை அனைவரையும் குறிப்பாக இளைஞர்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. யாருக்கு என்ன தேவை என்பதை யாராலும் முடிவு செய்ய முடியாது. ஒரு மனிதரை குறிப்பிட்ட மொபைல் செயலியைத்தான் (அப்ளிகேஷன்) பன்படுத்த வேண்டும் என நிர்பந்திக்க முடியாது.
எனவே, இணையதளப் பயன்பாடு பாரபட்சமின்றி அனைவருக்கும் கிடைக்கும்படி மாற்றம் செய்யப்பட வேண்டும். இணைய சம உரிமைக் கொள்கையில் மிகுந்த நம்பிக்கையுடையவனாக இருக்கிறேன்.
இந்தியாவிலுள்ள எந்தவொரு குடிமகனும் சமமான அளவில் முழு வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்துவதை டிராய் உறுதி செய்ய வேண்டும்.இணைய சமவாய்ப்பை அசைத்துப் பார்க்கும் முயற்சி வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு பெரும் பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும். இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT