Last Updated : 31 Mar, 2015 12:07 PM

 

Published : 31 Mar 2015 12:07 PM
Last Updated : 31 Mar 2015 12:07 PM

பாபர் மசூதி இடிப்பு விவகாரம்: அத்வானி உட்பட 20 பேருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தொடர்புடைய தலைவர்கள் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அத்வானி உள்ளிட்ட 20 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1992-ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் எல்.கே.அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் கூட்டுச் சதி செய்ததாக சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில் இருந்து அவர்களை விடுதலை செய்து கடந்த 2001-ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றமும் விடுதலையை உறுதி செய்து 2010-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத் தில் சிபிஐ சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. பாபர் மசூதி வழக்கை தொடர்ந்தவர்களில் ஒருவரான ஹாஜி மஹபூப் அஹமது என்பவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனுவில், ‘மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாபர் மசூதி வழக்கில் தொடர்புடையவர்களுக்கும் ஆட்சியில் இருப்பவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், சிபிஐ அமைப்பில் அவர்களின் தலையீடு இருக்க வாய்ப்புள்ளது. சிபிஐ நடுநிலையுடன் இந்த வழக்கில் செயல்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது’ என்று கூறியிருந்தார்.

இம்மனு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் தொடர்புடைய எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது உத்தரப் பிரதேச மாநில முதல்வராக இருந்த கல்யாண் சிங் (தற்போது ராஜஸ்தான் மற்றும் இமாச்சல பிரதேச ஆளுநர்), மத்திய அமைச்சர் உமாபாரதி ஆகியோர் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

இவர்கள் தவிர வழக்கில் தொடர்புடைய இந்து அமைப்புகளைச் சேர்ந்த வினய் கத்தியார், சதீஷ் பிரதான், சி.ஆர்.பன்சால், அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், சாத்வி ரிதம்பரா, வி.எச்.டால்மியா, மகந்த் அவாத்யநாத், ஆர்.வி.வேதாந்தி, பரம் ஹன்ஸ்ராம் சந்திரதாஸ், ஜெகதீஷ் முனி மகாராஜ், பி.எல்.சர்மா, நித்யகோபால் தாஸ், தரம் தாஸ், சதீஷ் நாகர், மொரேஷ்வர் சவே ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஹாஜி மஹபூப் அஹமது தாக்கல் செய்த மனு குறித்து சிபிஐ அமைப்பும் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x