Published : 08 Apr 2015 02:59 PM
Last Updated : 08 Apr 2015 02:59 PM
அன்றாடம் மனித ஆரோக்கியத்தை பேணி காக்க உதவும் 509 மருந்துகளின் விலைகளை உயர்த்திக் கொள்ள நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
சர்க்கரை நோய், ஈரல் அழற்சி (ஹெபடைடிஸ்), மற்றும் புற்று நோய் சிகிச்சைக்கான மருந்துகள் உட்பட முக்கிய 509 மருந்துகளின் விலைகளை உயர்த்த மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக தேசிய மருந்து விலை ஆணையம் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் இந்த 509 முக்கிய மருந்துகளின் விலைகள் மொத்த விற்பனை குறியீட்டின் படி 3.84% அதிகரிக்கவுள்ளது.
இந்த விலை உயர்வுகளின் படி ஹெபடைடிஸ்-பி மற்றும் சி வகை நோய் சிகிச்சைக்குப் பயன்படும் ஆல்ஃபா இண்டெர்ஃபெரான் என்ற ஊசி மருந்து, புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கார்போபிளாடின் என்ற ஊசி மருந்து, காளான் நோய் தொற்று தடுப்பு மருந்தான ஃபுளுகனாஸோல் மாத்திரைகளின் விலைகள் அதிகரிக்கின்றன.
மருந்து நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒரு முறைதான் விலைகளை உயர்த்த அனுமதி உள்ளது. முக்கிய மருந்துகளின் பட்டியலில் ஆணுறைகளும் உள்ளன. எனவே இதன் விலையும் அதிகரிக்கவுள்ளது.
அன்றாடம் காய்ச்சல், கிருமி பாதிப்பு நோய்களுக்கு கொடுக்கப்படும் மிகவும் பிரபலமான அமாக்சிஸிலின் மாத்திரைகள் விலைகளும் உயர்வதை தவிர்க்க முடியாது.
மொத்தம் 348 முக்கிய மருந்துகளின் விலை நிர்ணயக் கட்டுப்பாடு மத்திய அரசின் கையில் உள்ளது. இதன் படி மருந்து நிறுவனங்கள் ஆண்டுக்கு 10% வரை ஒரு முறை விலையை உயர்த்திக் கொள்ளலாம்.
இந்த விலை உயர்வு அறிவிப்பின் படி தற்போது முக்கிய மருந்துகளின் விலைகள் 10% வரை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது மருந்து விலைகள் அதிகம் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் விலைகளை உயர்த்த மத்திய அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT