Published : 02 Apr 2015 08:44 AM
Last Updated : 02 Apr 2015 08:44 AM
மகாராஷ்டிராவில் நடைபெற்ற குழந்தைகள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் கிரிஷ் மகாஜன் துப்பாக்கி எடுத்துச் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் சிவசேனா அதை நியாயப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சிவசேனா கட்சியின் சார்பில் வெளியாகும் சாம்னா பத்திரிகையின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:
குழந்தைகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் கிரீஷ் துப்பாக்கி கொண்டு சென்றதில் என்ன தவறு உள்ளது. உரிமம் பெற்றவர்கள் யாரும் துப்பாக்கி கொண்டு செல்லலாம். அமைச்சராக இருந்தாலும் அவருக்கு துப்பாக்கி எடுத்துச் செல்ல உரிமை உள்ளது.
முந்தைய ஆட்சியில் பொது மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஆபத்து இருந்தது. எந்த குண்டு யாரை கொல்லும் என்று யாராலும் கணிக்க முடியாத சூழல் நிலவியது. அந்த அச்சம் இன்னும் மக்கள் மனதைவிட்டு அகலவில்லை. அமைச்சர் மகாஜனுக்கும் அதே மனநிலைதான் உள்ளது. எனவே அவர் துப்பாக்கி எடுத்துச் சென்றதற்கு முந்தைய அரசின் நிர்வாக சீர்கேடே காரணம்.
அதேநேரம் முந்தைய அரசின் தோல்விகளுக்கு இப்போதைய அரசை பொறுப்பாக்க முடியாது. சட்டம் ஒழுங்கு பற்றி எதிர்க்கட்சிகள் எதையாவது சொன்னால் அதை நகைப்புக்குரியாதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆட்சியாளர்களிடம் ஆயுதம் இருந்தால் அது பொதுமக்கள் பாதுகாப்புக்குத்தான். ஆயுதத்தை பயன்படுத்தி அமைச்சர் எதையும் சூறையாடவில்லை. இப்படிப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்று தெரியவில்லை.
இவ்வாறு தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்கானில் பேச்சு மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மகாஜன் தனது இடுப்பில் துப்பாக்கியை சொருகி இருந்தார். இதற்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.
மகாஜன் அமைச்சர் பதவியி லிருந்து விலக வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் தற்காப்புக்காகவே தான் துப்பாக்கியை கொண்டு செல்வதாகவும், எந்தவித வன்முறையிலும் தனக்கு தொடர்பு இல்லை என்றும் அமைச்சர் மகாஜன் விளக்கம் அளித்திருந்தார்.
அமைச்சர் மகாஜன் சட்டத்தை மீறவில்லை என்று முதல்வர் தேவேந்திர பட்னவிஸும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT