Published : 16 Apr 2015 01:13 PM
Last Updated : 16 Apr 2015 01:13 PM
சர்வதேச அரங்கில் ஊழல் மிகுந்த நாடு என்று இந்தியா மீது பதிந்துள்ள கண்ணோட்டத்தை மாற்றி திறமையானவர்களைக் கொண்ட நாடாக மாற்றுவேன் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.
வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இறுதியாக கனடாவுக்குச் சென்றார். டொரன்டோ நகரில் வசிக்கும் வெளிநாடுவாழ் இந்தி யர்கள் மத்தியில் நேற்று அவர் பேசிய தாவது:
இந்தியா பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வாக ஒரு மருந்து உள்ளது. (அப்போது மோடி, மோடி என்று குரல் கொடுத்தனர்) நம் நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் வளர்ச்சி மட்டும்தான் தீர்வாக அமையும். பொருளாதார வளர்ச்சி மட்டுமே நாட்டை முன்னோக்கி அழைத்துச் செல்லும்.
இந்தியா மீதி சிலர் (முந்தைய அரசைக் குறிப்பிடுகிறார்) கறையை ஏற்படுத்தி விட்டனர். அந்தக் கறையை நாங்கள் அகற்றிவிடுவோம் என்று உறுதி கூறுகிறேன். இந்திய நாடு மிகப்பெரியது. அதில் நிறைய கறைகள் உள்ளன.
அவை மிக நீண்டகாலமாக இருந்து வருகின்றன. அதை அகற்ற சில காலம் பிடிக்கும். ஆனால் மக்களின் மனநிலை மாறியிருப்பதால் அதை அகற்றிவிடுவோம்.
சர்வதேச அரங்கில் இந்தியா என்றால் ஊழல் நாடு என்ற எண்ணம் முன்பு நிலவியது. அந்த மனநிலையை மாற்றி திறமையானவர்களைக் கொண்ட நாடு என மாற்ற முயற்சி செய்து வருகிறோம். இந்தியர்களிடம் போதுமான திறமை இருக்கிறது. ஆனால், அதை வெளிப்படுத்த வாய்ப்பு தேவைப்படுகிறது.
இந்தியாவில் 35 வயதுக்குட் பட்டவர்கள் எண்ணிக்கை 65 சதவீதமாக உள்ளது. நமது இளைஞர்கள் நாட்டுக்காக தங்கள் சக்தியைப் பயன்படுத்த முடிவு செய்துவிட்டால், வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.
அமைதிக்கு பெயர் பெற்ற மகாத்மா காந்தி, கவுதம புத்தர் பிறந்த இந்தியாவுக்கு ஒரு காலத்தில் அணு உலைகளை வழங்க உலக நாடுகள் மறுப்பு தெரிவித்தன. இப்போது இந்தியாவுக்கு அணு உலைகளை வழங்க பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் முன்வந்துள்ளன. அவற்றுக்கான எரிபொருளை வழங்க கனடா முன்வந்துள்ளது. இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்து உலக நாடுகள் கலக்கம் அடைந்துள்ளன. இந்தப் பிரச்சினை குறித்து சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஏ.சி. அறைகளுக்குள் இருந்துகொண்டு விவாதிக்கிறார்கள். ஆனால், அணு மின்சாரம் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மின் சக்தியை உருவாக்க இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது.
நான் குஜராத் முதல்வராக இருந்தபோதே கனடாவுடன் நெருங்கிய உறவு வைத்திருந்தேன். இனி வரும் காலங்களில் இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் இணைந்து பணியாற்றும். இவ்வாறு மோடி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் மற்றும் அவரது மனைவியும் உடன் இருந்தனர். கடந்த 1973 ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கனடா சென்றார். 42 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் கனடா சென்றிருப்பது இதுவே முதன்முறை.
முன்னதாக, கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பருடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், அணு மின்சாரம் உற்பத்தி செய்ய தேவையான மூலப்பொருளான யுரேனியத்தை இந்தியாவுக்கு கனடா சப்ளை செய்வது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது.
சிற்பத்தை திருப்பித் தந்தார்
மேலும், திறன் மேம்பாடு தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே 13 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. விண் வெளியில் ஒத்துழைப்பு தொடர் பான ஒப்பந்தமும் கையெழுத் தானது.
1970-ம் ஆண்டு மேற்கொள் ளப்பட்ட யுனெஸ்கோ ஒப்பந் தத்தின்படி, கனடா நாட்டுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியிடம், அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், கஜுராஹோ கோவிலின் 900 வருட பழைமையான ‘கிளி பெண்’ சிற்பத்தை திருப்பித் தந்தார்.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்:
“இந்தியாவின் பாரம்பரியமிக்க ‘கிளி பெண்’ என்ற சிற்பத்தை கனடா திருப்பி தந்துள்ளது. கஜுராஹோவில் இருந்த இந்த கற்சிற்பத்தினை பிரதமர் மோடி திரும்ப பெற்றுள்ளார்” என கூறியுள்ளார்.
அந்த சிற்பத்தில், நடனமாடும் ஒருவரின் முதுகில் கிளி ஒன்று உடன் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த விலை மதிப்புமிக்க கலை பொருள் கனடா நாட்டில் ஒருவரிடம் இருப்பது கடந்த 2011-ம் ஆண்டு தெரியவந்தது. அவரிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில் அது பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
பின்னர் கனடா நாட்டு அதிகாரிகள் இந்திய அதிகாரிகளை தொடர்பு கொண்டு சிற்பத்தை திருப்பி தர ஒப்புக் கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT