Published : 20 Apr 2015 04:53 PM
Last Updated : 20 Apr 2015 04:53 PM
லோக்பால் சட்டத் திருத்த மசோதா குறித்து ஆராய்ந்து வரும் நாடாளுமன்றக் குழு தனது இறுதி அறிக்கையை ஜூன் இறுதிக்குள் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து நாடாளுமன்றக் குழுவின் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான இ.எம். சுதர்சன நாச்சியப்பன் கூறும்போது, “லோக்பால் சட்டத் திருத்த மசோதா தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க ஜூன் 30 வரை கால அவகாசம் பெற்றுள்ளோம். கடந்த 15-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்தோம். இதுபோல் மேலும் பல கூட்டங்களை நடத்தி மக்களின் கருத்துகளை அறியவுள்ளோம்” என்றார்.
‘லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மற்றும் பிற தொடர்புடைய சட்டத் திருத்த மசோதா - 2014’ என்ற பெயரிலான இந்த மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இது மத்தியப் பணியாளர் நலம், சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு கடந்த மார்ச் 25-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. நிலைக்குழுவால் தனது அறிக்கையை உரிய காலத்துக்குள் சமர்பிக்க முடியவில்லை. இதையடுத்து இக்குழு தனது பணியை முடிக்க மாநிலங்களவைத் தலைவரிடம் கூடுதல் அவகாசம் கேட்டுப் பெற்றது.
பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது பாதி, வரும் மே 8-ம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில், இக்கூட்டத் தொடரில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு வாய்ப்பில்லை என தெளிவாகியுள்ளது.
லோக்பால் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் தொடர்பாக சிபிஐ, சிவிசி (மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்) ஆகியவற்றின் கருத்துகளை நிலைக்குழு ஏற்கெனவே பெற்றுள்ளது.
அரசு நிர்வாகிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, மத்தியில் லோக்பால் என்ற அமைப்பும் மாநிலங்களில் லோக் ஆயுக்தா என்ற அமைப்பும் ஏற்படுத்த இந்த சட்டம் முந்தைய காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது.
லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்களை பிரதமர் தலைமையிலான குழு தேர்ந்தெடுக்கும். இக்குழுவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்படும் உச்ச நீதிமன்ற நீதிபதி, குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஒருவர் ஆகியோர் இடம்பெறுவார்கள்.
இந்நிலையில் மக்களவையில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் இல்லாதபோது மிகப்பெரிய எதிர்க்கட்சியின் தலைவரை உறுப்பினராக நியமிக்க சட்டத் திருத்தம் வகை செய்கிறது.
மேலும் சிபிஐ சுதந்திரமாக செயல்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் அதன் இயக்குநராக நியமிக்கப்படுபவரின் தகுதிகளை இந்த மசோதா வரையறை செய்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT