Published : 17 Apr 2015 05:42 PM
Last Updated : 17 Apr 2015 05:42 PM
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இணைய சமவாய்ப்புக்கு குரல் கொடுத்துள்ளார். இணைய சமவாய்ப்பை அசைத்துப் பார்க்கும் முயற்சி வளர்ந்து வரும் ஐ.டி. துறைக்கு பெரும் பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக டிராய் தலைவர் ராகுல் குல்லாருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "இணைய சமவாய்ப்பை அசைத்துப் பார்க்கும் முயற்சி வளர்ந்து வரும் ஐ.டி. துறைக்கு பெரும் பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் ஏழை மக்களையும் பாதிக்கும். இப்போதெல்லாம் பணக்காரர்களுக்கு மட்டுமானது அல்ல இணைய தொழில்நுட்ப சேவை. ஏழை மக்கள் பயனடையும் வகையில் வழங்கப்படும் நிறைய சேவைகள் இணையம் மூலம் வழங்கப்படுகின்றன. எனவே இணையத்தில் சமவாய்ப்பு நிலை நாட்டப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட செயலியை மட்டுமே ஒரு தனியார் தொலைதொடர்பு நிறுவனம் விரும்பும் ஒரே காரணத்துக்காக அதை ஒரு இணைய வாடிக்கையாளர் மீது திணிக்க முயற்சிக்கக் கூடாது" இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில இணையப் பக்கங்களை மட்டுமே பார்க்கச் செய்தல், சில இணையப் பக்கங்களை மட்டுமே வேகமாக அளித்தல், சில இணையப் பக்கங்களுக்கு கட்டணம் விதித்தல் - என்கிற புதிய நடைமுறையைத் திணிக்க டிராய் அமைப்பு முயற்சிக்கிறது.
செல்பேசிகளில் இயங்கும் செயலிகளில் (App) சிலவற்றுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க முயற்சிக்கிறது. எதிர்காலத்தில் செல்பேசிகள் வழியாகவே மிக அதிக அளவில் இணையம் பயன்படுத்தப்படும் என்பதால், செல்பேசி வழியாக வழங்கப்படும் சேவைகளில் இந்த விதிமுறைகளைத் திணிக்க டிராய் முயற்சிக்கிறது என்பது குற்றச்சாட்டு.
இதை முன்வைத்தே ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் டிராய் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT