Last Updated : 27 Apr, 2015 08:00 PM

 

Published : 27 Apr 2015 08:00 PM
Last Updated : 27 Apr 2015 08:00 PM

நேபாளத்தின் துயர் துடைக்கும் இந்திய உதவிக் கரம்

சாகசங்கள் செய்து உலகை வியக்க வைக்கலாம், சாதனைகள் புரிந்து சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம். ஆனால், இவற்றில் எதுவும் செய்யாமல் நம் இந்திய விமானப் படை அடுத்தடுத்து உலகத்தின் கவனத்தை தன் வசம் திருப்பியுள்ளது. காரணம் அது துரிதமாக நீட்டிய உதவிக் கரம். அசாதாரணமாக அரங்கேற்றிய மீட்புப் பணிகள்.

இராக்கில் ஐ.எஸ். ஆதிக்கத்துக்கு உட்பட்ட பகுதியில் இருந்து இந்தியர்களை மீட்டது. உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள ஏமனில் இருந்து தனது நாட்டின் குடிமக்களை மீட்டது என்ற வரிசையில் இது மற்றுமொரு மைல்கல்.

25 ஏப்ரல் 2015. வழக்கம்போல் பொழுது புலர்ந்திருந்தாலும். அன்றைய தினம் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. நேபாளம், நம் அண்டை நாட்டில் அன்று இயற்கை கோர தாண்டவம் ஆடியிருந்தது. அதன் தாக்கம் சொந்த நாட்டிலும் எதிரொலித்திருந்தது.

மக்கள் பீதியும், மரண ஓலங்களும் நிறைந்த அந்த வேளையில் என்ன நடந்தது என்ற தகவல்கள் முழுமையாக வரவில்லை. நிலநடுக்கத்தின் தாக்கத்தின் அளவு மட்டுமே நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ரிக்டரில் 7.9 என்ற தாக்கத்தின் வீச்சை மட்டுமே புரிந்து கொண்டு இந்தியா சார்பில் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. நேபாளத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் என்ற அறிவிப்பை ட்விட்டரில் அவர் தெரிவிக்கிறார். உலக நாடுகளில் முதலில் உதவிக்கரத்தை நீட்டியது இந்தியாதான்.

நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களிலேயே மீட்புப் பணியில் இந்திய விமானப் படை முழு வீச்சில் இறங்கியது. 'ஆபரேஷன் மைத்ரி' என்று பெயரிடப்பட்ட மீட்பு நடவடிக்கை கடுமையான சவால்களுக்கு இடையே நடந்து வருகிறது. இமாலயத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் புவியியல் ரீதியில் மீட்புப் பணிகளை மிகவும் சவாலானதாக மாற்றியுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரத்தில் அதன் விளைவுகள் குறித்து யூகித்து அடுத்து 4 மணி நேரத்துக்குள் C-17 ரக விமானம் 96 வீரர்களுடன் 15 டன் எடையில் நிவாரணப் பொருட்களுடன் புறப்பட்டுச் சென்றது.

நிலநடுக்கத்தால் உருக்குலைந்து போன நேபாளத்தில் இந்திய விமானப் படையின் 'ஆபரேஷன் மைத்ரி'-யின் சாதூர்யமான நடவடிக்கையால் இதுவரை 2,500 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீட்புப் பணிகளின் நிலவரத்தை நமக்கு தெரிவித்துக் கொண்டிருப்பதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருப்பதிலும் மத்திய அரசு அங்கங்களில் ட்விட்டர் பக்கங்களின் செயல்பாடுகள் குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்கள் வெறும் சந்தோஷப் பகிர்வுகளுக்கு மட்டுமல்ல ஒரு பேரிடர் காலத்தில் அதை எப்படி ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்வது என்பதை உலகுக்கே பறைசாற்றும் வகையில் நடந்து வருபவையே அடுத்தடுத்த நிகழ்வுகள்.

>https://twitter.com/SpokespersonMoD, >https://twitter.com/SushmaSwaraj, >https://twitter.com/PIB_India - இந்த மூன்று ட்விட்டர் பக்கங்களையும் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் முதன்மை செய்தித் தொடர்பாளர் சிதான்சு கர். நேபாள நிலநடுக்கம் அதிர்வுகள் அடங்குவதற்கு முன்னர் இவர் ட்விட்டரில் நிலைத் தகவலை பதிவு செய்தார். இந்திய விமானப்படை ஆயத்தமாக இருக்கிறது. அரசு உத்தரவுக்காக காத்திருக்கிறது என குறிப்பிட்டிருந்தார். அந்த பதிவில் தொடங்கி தற்போது (நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும் நொடி வரை) மணிக்கு ஒருமுறை நிலைத் தகவல் பதிவாகி வருகிறது. #NepalEarthquake எனத் தொடங்கி அதன் கீழ் அனைத்து தகவல்களும் வழங்கப்பட்டு வருகின்றன. எத்தனை விமானங்கள் புறப்பட்டுள்ளன. என்னென்ன உதவிப் பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன. மீட்புக் குழுவில் எத்தனை பேர் உள்ளனர். குழுவினர் தற்போது எங்கு முகாமிட்டுள்ளனர் என அனைத்து தகவல்களும் பதிவேற்றப்படுகின்றன. (#NepalEarthquake India is moving in massive amount of rescue & relief material, equipment and specialists 2day. Shall keep you updated.) இது ஒரு சான்று.

ஆங்காங்கே சிக்கிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இத்தகைய தகவல்கள் உயிர் பிழைக்கும் நம்பிக்கையை ஊட்டும் என்பதில் ஐயமில்லை. அதேபோல், நேபாள மீட்புக் குழுவினருக்கும் தங்களுக்கு என்ன மாதிரியான உதவிகள் வந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு மீட்புப் பணிகளை திட்டமிட முடியும்.

பாதுகாப்பு அமைச்சக அதிகாரியின் செயல்பாடு இதுவென்றால் வெளியுறவு அமைச்சகமும் சற்றும் சளைத்ததில்லை என்பதற்கேற்ப உதவிகளை செய்து வருகிறது. வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் ட்விட்டர் பக்கத்தில், கன்ட்ரோல் அறைகளின் தொடர்பு எண்களை பட்டியிலிடுவதில் தொடங்கி தகவல்களை அவ்வப்போது தெரிவிக்கப்பட்டு வருகிறது.

நேபாளத்தில் உள்ள தூதரக அதிகாரியின் மகள் நிலநடுக்கத்தில் பலியானதற்கு வருத்தம் தெரிவிக்கவும் அமைச்சர் தவறவில்லை. நேபாளத்தில் மின்சார சேவையை சீரமைக்க பொறியாளர்களை அனுப்ப மின் துறை அமைச்சர் பியூஷ் கோயல் முன் வந்துள்ளதை சுட்டிக் காட்டி நன்றி தெரிவித்திருந்தார். சுற்றுலா சென்ற நம் உறவினர்கள் நிலை என்னவாகுமோ என்று அஞ்சி நிற்கும் உறவினர்ளுக்கு உணர்வுபூர்வமாக உறுதுணையாக இருப்பதுபோல், உள்ளது சுஷ்மாவின் ட்விட்டர் பதிவுகள்.

நல்லெண்ணத்துக்கு செயல் வடிவம்

அண்டை நாடுகளுடன் நட்புறவு பேணப்படும் என சர்வதேச மாநாட்டுகளின்போது நல்லெண்ண அறிவிப்புகளை உலகத் தலைவர்கள் உதிர்ப்பது சகஜமே. ஆனால், அந்த நல்லெண்ணத்துக்கு செயல் வடிவம் கொடுத்துள்ளது இந்தியா.

நிலநடுக்கத்தால் பேரழிவுக்கு உள்ளான நேபாளத்துக்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கி விடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, நேபாளத்தில் சிக்கியுள்ள வெளி நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு நல்லெண்ண விசா வழங்கி அவர்களை விரைவாக மீட்க உதவும்படி குடியேற்றப் பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இணைந்து கொண்ட ஏர் இந்தியா:

பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து உதவி செய்வது யார் என்பதில் போட்டா போட்டியே ஏற்பட்டுவிடுமோ என்ற அளவுக்கு நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில், காத்மாண்டு மார்க்கத்துக்கான கட்டணத்தை ஏர் இந்தியா நிறுவனம் குறைத்துள்ளது. மேலும் நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டினரை மீட்பதற்காக காத்மாண்டிலிருந்து பிற நகரங்களுக்கும், பிற நகரங் களிலிருந்து காத்மாண்டுக்கும் கூடுதல் விமானம் இயக்கவும் முடிவு செய்துள்ளது.

பேராற்றல்...

எப்போதெல்லாம் போரும், பேரிடரும் நாடுகளைச் சூழ்ந்து கொள்கிறதோ அப்போதெல்லாம் வளர்ந்த நாடுகளே முதலில் முன்வந்து நிவாரணப் பொருட்களையும், மீட்புக் குழுவினரையும் அனுப்பி வைக்கும். மருத்துவ உதவிகளைச் செய்வதில் செஞ்சிலுவைச் சங்கமே நம் நினைவுக்கு முதலில் அடையாளப்படும். ஆனால், அண்மைக்காலமாக போர் பாதித்த பகுதிகளிலும், பேரிடர் ஏற்பட்ட இடங்களிலும் இந்தியா குறிப்பாக இந்திய விமானப் படையின் பேராற்றல் பெருமிதம் கொள்ள வேண்டிய ஒன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x