Published : 05 Apr 2015 11:08 AM
Last Updated : 05 Apr 2015 11:08 AM
டெல்லி துணை நிலை ஆளுநருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள திடீர் அறிவுறுத்தலால் முதல்வர் கேஜ்ரிவால் ஆளுநர் நஜீப் ஜங் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் தலைநகரான டெல்லிக்கு மற்ற மாநிலங்களைப் போல் முழு அதிகாரம் தரப்படவில்லை.
நிலம், காவல்துறை உள்ளிட்ட அதிகாரங்கள் மத்திய அரசின் வசமே உள்ளன. இந்த வகையில் டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கு மத்திய உள்துறை அமைச்சகம் திடீர் அறிவுறுத்தல் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து டெல்லி ஆளுநர் மாளிகை அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறும்போது, “டெல்லியை நிர்வகிக்கும் முழு பொறுப்பு ஆளுநருக்கு மட்டுமே உள்ளது. டெல்லி முதல்வர் கேட்கும் பல்வேறு விளக்கங்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்தக் கருத்தை அதன் சட்டப்பிரிவுகளுடன் குறிப்பிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று முன் தினம் அறிவுறுத்தல் அனுப்பியுள்ளது.
இந்த அறிவுறுத்தலில் குறிப்பாக, டெல்லி காவல்துறை, டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆகியவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் வருவதால், இவற்றின் மீது முதல்வர் கேட்கும் விளக்கங்களுக்கு ஆளுநர் பதில் தரவேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது” என்றனர்.
உள்துறை அமைச்சகத்தின் இந்த அறிவுறுத்தலால் முதல்வர் கேஜ்ரிவால் ஆளுநர் நஜீப் ஜங் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தால் வரும் நாட்களில் கேஜ்ரிவால் மத்திய அரசுடனும் நேரடி மோதலில் இறங்கவும் வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலின்போது, டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து பெற்றுத் தருவோம் என கேஜ்ரிவால் கூறியிருந்தார்.
இதற்கான முயற்சியில் இறங்கும் வகையில் அவர், டெல்லி காவல்துறை மற்றும் டெல்லி வளர்ச்சி ஆணையம் உட்பட சில துறைகளின் செயல்பாடுகள் மற்றும் அதிகார வரம்புகள் குறித்து விளக்கம் கேட்டு ஆளுநர் நஜீப் ஜங்குக்கு சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார். இதைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தலை நஜீப் ஜங்குக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.
தொடங்கிவிட்ட மோதல்
என்றாலும் இதற்கு முன்னதாகவே, டெல்லி தலைமைச் செயலாளர் விவாகரத்தில் கேஜ்ரிவால் - நஜீப் ஜங் இடையே மோதல் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இங்கு புதிய தலைமைச் செயலாளர் பதவிக்காக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர் குறிப்பிட்டு கேஜ்ரிவாலிடம் கருத்து கேட்கப்பட்டிருந்தது.
இதை ஏற்க மறுத்த கேஜ்ரிவால், தாம் மிகவும் விரும்பிய அருணாசலப்பிரதேச தலைமைச் செயலாளர் ரமேஷ் நேகியின் பெயரை பரிந்துரை செய்திருந்தார்.
இதை மத்திய அரசு ஏற்க மறுத்ததால், கேஜ்ரிவால் மீண்டும் கோவா மாநில தலைமைச் செயலாளரான கே.கே. சர்மா வின் பெயரை பரிந்துரைக்க வேண்டியதாயிற்று. மார்ச் 10-ம் தேதி சர்மா பொறுப்பேற்கும் வரை பொறுப்பு தலைமைச் செயலாளராக சஞ்சீவ் நந்தன் சஹாய் என்பவரை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பாக தங்களிடம் கருத்து கேட்கப்படவில்லை என்று துணை முதல்வர் மணிஷ் சிசோடியா புகார் கூறி வந்தார். இந்த இரு விவகாரங்கள் தான் மோதலுக்கு வித்திட்டதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT