Published : 09 Apr 2015 05:59 PM
Last Updated : 09 Apr 2015 05:59 PM
தொழிற்துறையினருக்கான தனது செய்தியாக பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், கடுமையான சட்டதிட்டங்களை, நடைமுறைகளை முகேஷ் அம்பானிக்காக மட்டுமே அகற்ற முடியாது, சாமானியருக்கும் முகேஷ் அம்பானிக்கும் ஒரே கொள்கையே என்றார்.
இந்துஸ்தான் டைம்ஸ் செய்தித்தாளுக்கு பிரதமர் அளித்துள்ள பேட்டியில், “அனைவருக்குமான நல்லாட்சியே அரசின் பணி. எங்கள் அரசு கொள்கைகளை உருவாக்குகிறது, அதில் பொருத்திக் கொள்ள முடிந்தால் வரவும் அல்லது எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள்.
என்னுடைய வேலை அனைவருக்கும் ஊட்டிவிடுவது அல்ல. நாட்டின் தனியார் துறையினர் ஆட்சியின் சட்டதிட்ட நடைமுறைகளைப் பற்றியே சிந்தித்து வருகின்றனர். இதில் வரி பயங்கரவாதம், தீர்வை விதிப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விலக்கு ஆகியவை அடங்கும்.
அதனால்தான் 2015-16 நிதிநிலை அறிக்கையில் இத்தகைய சிக்கல்கள் உள்ள பல விவகாரங்களை எடுத்துரைத்தோம். அவற்றைச் சரிசெய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய நடைமுறைகள் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதில் முக்கிய அடிவைப்புகளாகும்.
நான் மீண்டும் அனைவருக்குமான உத்தரவாதத்தை அளிக்கிறேன், “நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால், உங்களுக்காக நாங்கள் 2 அடி எடுத்து வைப்போம்” என்றார் மோடி.
அயல்நாட்டு முதலீட்டாளர்கள் பலருக்கு வரிக்கான நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டது உட்பட வர்த்தகத்துக்கு எளிதான சூழ்நிலை இல்லையே என்ற கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு பதில் அளித்தார்.
மேலும் வங்கித் துறையில் முக்கியஸ்தரான தீபக் பரேக், சமீபத்தில் 9 மாத கால பாஜக ஆட்சியில் வர்த்தகத்துக்கான எளிதான சூழல் அமையவில்லை, இந்த விவகாரத்தில் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று அவர் சாடியிருந்தார். இதே தொனியில் பிற தொழில்துறை அதிபர்களும் மோடியின் இதுநாள் வரையிலான ஆட்சியை விமர்சனம் செய்திருந்தனர்.
இது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, “முதலில் ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எங்கள் அரசு சாமானிய மக்கள் நலன்களுக்காக பாடுபட்டு வருகிறது. நாட்டின் ஏழை மக்களுக்குத்தான் எங்கள் முன்னுரிமை. நல்ல செயலூக்கமுள்ள இடைவெளியற்ற நல்லாட்சியையே நாங்கள் அளிக்க விரும்புகிறோம். இதன் முடிவுகள் அனைத்துத் துறைகளிலும் வெளிப்படையாகத் தெரிகிறது.
நாங்கள் வளர்ச்சிக்கான நடைமுறைகளை முடுக்கிவிட்டதன் பயன்களை தொழிற்துறையினர் மனமுவந்து ஏற்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியினர் எங்கள் அரசை தொழிலதிபர்களுக்கான ஆட்சி என்று குற்றம்சாட்டுகிறது, ஆனால் தொழிற்துறையினரோ நாங்கள் அவர்களுக்காக எதுவும் செய்யவில்லை என்கின்றனர்.
நாட்டின் சட்டதிட்ட நடைமுறைகள் முகேஷ் அம்பானிக்கு மட்டுமல்ல, சாமானிய மக்களுக்கும்தான்.
என்ன சூழ்நிலையில் மக்கள் எங்களை ஆட்சிக்குக் கொண்டு வந்தனர்? இப்போது என்ன சூழ்நிலை? எங்காவது கொள்கை முடக்கம் இருக்கிறதா? இல்லை. வெளிப்படைத்தன்மை விவகாரம் உள்ளதா? இல்லை. அரசு செயலற்று இருக்கிறதா? இல்லை. மாறாக முழுதும் செயலூக்கமே உள்ளது” இவ்வாறு கூறியுள்ளார் மோடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT