Last Updated : 03 Apr, 2015 09:12 AM

 

Published : 03 Apr 2015 09:12 AM
Last Updated : 03 Apr 2015 09:12 AM

ஊழல்களை அம்பலப்படுத்துவதால் ஹரியாணா ஐஏஎஸ் அதிகாரி 45 முறை இடமாற்றம்: வேதனைப்படுகிறார் கெம்கா

என்னை பணியிட மாற்றம் செய்திருப்பது மன வேதனை அளிக்கிறது என்று ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா (49) தெரிவித்துள்ளார். அதேநேரம், மாநில அமைச்சர் ஒருவர் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

ஹரியாணா மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நில ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுப்பியதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தவர் கெம்கா. ஒரு கட்டத்தில் அந்த நில ஒப்பந்தங்களை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், முதல்வர் மனோகர்லால் கட்டார் (பாஜக) தலைமையிலான அரசு, கெம்கா உட்பட 9 ஐஏஎஸ் அதிகாரிகளை நேற்று முன்தினம் பணியிட மாற்றம் செய்தது. இதன்படி, போக்குவரத்துத் துறை ஆணையர் மற்றும் செயலாளராக இருந்த கெம்கா, தொல்லியல் மற்றும் அருங்காட்சியக துறைக்கு திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதுகுறித்து கெம்கா ட்விட்டரில், “போக்குவரத்துத் துறையில் ஊழலை ஒழிப்பதற்காக கடுமையாக முயற்சித்து வந்தேன். கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் இத்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டேன். இந்த நிலையில் என்னை வேறு துறைக்கு மாற்றி இருப்பது உண்மையிலேயே மன வேதனை அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

அமைச்சர் ஆதரவு

இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் கூறும்போது, “காங்கிரஸ் தலை மையிலான முந்தைய ஆட்சியில் ஊழலை அம்பலப்படுத்தியவர் கெம்கா. அவருக்கு எப்போதுமே எனது ஆதரவு உண்டு. அவரை பணியிட மாற்றம் செய்தது குறித்து முதல்வரிடம் பேச உள்ளேன்” என்றார்.

எனினும், இதுகுறித்து மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் விலாஸ் சர்மா கூறும்போது, “மூத்த அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வது என்பது தண்டனை அல்ல. அது ஒரு வழக்கமான நடைமுறைதான். அமைச்சரவையின் ஒப்புதல் படிதான் இந்த மாற்றம் செய்யப் பட்டது” என்றார்.

22 ஆண்டுகளாக நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வரும் கெம்கா, இதுவரை 45 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எந்த ஒரு பதவியிலும் சில மாதங்களுக்கு மேல் நீடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x