Published : 09 Apr 2015 03:46 PM
Last Updated : 09 Apr 2015 03:46 PM
நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கமான கிரீன்பீஸ் இந்தியா அமைப்பின் 7 வங்கிக் கணக்குகளை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் வெளிநாட்டு பங்களிப்பு கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இந்த அமைப்பின் பதிவையும் ரத்து செய்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.
கிரீன்பீஸ் இந்தியா அமைப்புக்கு இருந்த ஐடிபிஐ, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி ஆகியவற்றின் 7 கணக்குகளை உடனடியாக முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அரசு சாரா சமூக அமைப்புக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதாவது நாட்டின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளது பற்றி ஏன் இந்த அமைப்பின் பதிவை ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கிரீன்பீஸ் பற்றி விசாரணை செய்து அறிக்கை அளித்த பாதுகாப்பு ஏஜென்சிகள் கிரீன்பீஸ் இயக்கம், இந்திய பொருளாதார பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கிறது என்று கூறி, இந்த அமைப்பின் பதிவை ரத்து செய்ய பரிந்துரை செய்துள்ளது.
நாட்டுநலன்களுக்கு எதிராக கிரீன்பீஸ் இந்தியா செயல்படுகிறது என்றும், அதன் பல செயல்பாடுகள் பொதுநலனுக்கு குந்தகம் விளைவிப்பதாக உள்ளது என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கருதுகிறது. மேலும் கிரீன்பீஸ் அமைப்பின் செயல்பாடுகள் மீது பிரிட்டனின் நலனையும் உள்துறை அமைச்சகம் கவனத்தில் கொண்டுள்ளது.
இந்த அமைப்புக்கு பெரும்பாலும் கிரீன்பீஸ் சர்வதேச அலுவலகங்களிலிருந்து நிதி வருகிறது. ஜெர்மனி, மற்றும் நெதர்லாந்திலிருந்து நிதி வருகிறது என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பிரிட்டன் நாடாளுமன்றம் கிரீன்பீஸ் அமைப்பை அழைத்து இந்திய அரசுக்கு எதிராக பேச வைக்கும் முயற்சிகள் நடைபெற்றதாகவும் உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தவிர, கடந்த 2 ஆண்டுகளாக பிரிட்டனைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பலர் கிரீன்பீஸ் இந்தியா அலுவலகத்துக்கு வருகை தந்து பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக ஆர்பாட்டங்களை நடத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கியதாகவும் அரசு தரப்பு ஏஜென்சிகள் மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளன.
இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற மாநாட்டை அமெரிக்காவில் இயங்கி வரும் 'கிளைமேட் ஒர்க்ஸ் பவுண்டேஷன்', மற்றும் 'வேர்ல்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிட்யூட்' நடத்தியது. இதில் கிரீன்பீஸ் ஆர்வலர்கள் 5 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் உலகில் உள்ள 999 அனல் மின் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன, இதில் 50% இந்தியாவில் உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையங்களுக்கு எதிரான போராட்டங்களில் கவனம் செலுத்த இந்த மாநாட்டில் திட்டமிடப்பட்டதாகவும் அரசு தரப்பு ஏஜென்சிகள் அவதானித்துள்ளன.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் ‘கண்காணிப்பு’ பட்டியலில் அமெரிக்காவின் ‘கிளைமேட் ஒர்க்ஸ் பவுண்டேஷன்’ சமீபத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் கூட கிரீன்பீஸ் இந்தியா அமைப்புக்கு அது ரூ.1.4 கோடி நன்கொடை அளித்துள்ளது. இதனையடுத்து மும்முனை உத்தி ஒன்றை வகுத்தது.
நிலக்கரி சுரங்கங்களுக்கு எதிரான போராட்ட இயக்கங்கள் வலைப்பின்னலை உருவாக்குவது, சுரங்க ஒதுக்கீடு நடைமுறைகளுக்கு எதிராக நீதிமன்றங்கள் அல்லது தீர்ப்பாயங்களுக்கு செல்வது, மற்றும் உள்நாட்டு/வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது. இந்த மூன்று உத்திகளை கீரின்பீஸ் இந்தியா வகுத்ததாக, உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT