Published : 07 Apr 2015 09:51 AM
Last Updated : 07 Apr 2015 09:51 AM
முஸ்லிம் சமூகத்தின் மூத்த தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்தனர்.
இச்சந்திப்பின்போது, இஸ்லாமிய புனித தலங்களுக்குச் சொந்தமான உடைமைகள் தொடர் பான பிரச்சினைகள் குறித்து பிரதமரிடம் அவர்கள் தெரிவித்தனர். முஸ்லிம் இளைஞர்களுக்கு கல்வித் துறையில் போதுமான வசதிகளைச் செய்து தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
அவர்களுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, “முஸ்லிம் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளின் குறைகளையும் தீர்க்க அரசு ஆதரவளிக்கும். தேசிய வளர்ச்சியில் முஸ்லிம் இளைஞர்கள் பெரிய அளவில் பங்களிப்பைச் செலுத்த வேண்டும். இஸ்லாமிய புனித தலங்கள் தொடர்பான பிரச்சினைகளை அரசு பரிசீலிக்கும். முஸ்லிம்களின் சமூக சூழ்நிலையைச் சீரமைக்கவும், கல்வி சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
விரைவான பொருளாதார வளர்ச்சி, மத நல்லிணக்கம், அமைதியை ஊக்குவிப்பது, தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவது போன்ற பிரதமரின் குறிக்கோள்களுக்கு தங்களின் முழு ஆதரவை அளிப்பதாக முஸ்லிம் தலைவர்கள் உறுதியளித்தனர்.
இச்சந்திப்பில், முஸ்லிம் மூத்த தலைவர்கள் சையத் சுல்தான் உல் ஹாசன் சிஷ்டி மிஸ் பாகி (சாஜிதா நஷின், அஜ்மீர் சரிப்), ஹஜரத் குலாம் யசின் சாகிப் (சாகர் காஸி, வாரணாசி), சேக் வாசீம் அஸ்ரபி (இமாம் தான்சீம், மும்பை), இஆர். முகமது ஹாமீத் (தேசிய தலைவர், இமாம் தான்சீம், நாக்பூர்), ஹால்மா தஸ்லீம் ராசா சாகீப் (தர்கா பரேல்வி சரிப், உ.பி), சையத் அப்துல் ரசீத் அலி (சையத் சாகீத் தர்கா ஷாக்டோல், மத்திய பிரதேஷ்), முலானா அபு பாகர் பாஸ்னி (நகோரி சரிப் தர்கா, ராஜஸ்தான்), சையத் அலி அக்பர் (தாஜ்புரா சரிப், சென்னை), அஜி அப்துல் அபீஸ் கான் (இமாம், தான்சீம் பாலாகம், ம.பி) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT