Last Updated : 20 Apr, 2015 11:49 AM

 

Published : 20 Apr 2015 11:49 AM
Last Updated : 20 Apr 2015 11:49 AM

சோனியா மீதான விமர்சனத்துக்கு எதிர்ப்பு: காங். அமளியால் மக்களவை ஒத்திவைப்பு

காங். அமளி எதிரொலி: சோனியா மீதான விமர்சனத்துக்கு வருத்தம் தெரிவித்தார் கிரிராஜ்

*

சோனியா காந்தி மீதான விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாகம் இன்று (திங்கள்கிழமை) காலை தொடங்கியது. அவை கூடியவுடன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் விமர்சித்ததைக் கண்டித்து மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அவைத்தலைவர் அமைதி காக்க பலமுறை அறிவுறுத்தியும் அமளி நீடித்தது. இதனால் அவை 20 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

அவையில் நடந்தது என்ன?

இன்று காலை மக்களவை கூடியதும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் விமர்சித்த விவகாரம் எழுப்பப்பட்டது. அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி. ஜோதிராதித்ய சிந்தியா, "சோனியா காந்தியை விமர்சித்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பதவி விலக வேண்டும். அவரது கருத்து இந்தியப் பெண்களை மட்டும் காயப்படுத்தவில்லை. இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனையும், ஏன் நைஜீரியர்களையும் அவமானப்படுத்துவதாக அமைந்துள்ளது. இவ்விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்விவகாரத்தில் பிரதமர் மவுனியாக இருப்பது ஏன்" என்றார்.

அப்போது குறுக்கிட்ட மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, "இத்தகைய கருத்துகள் யார் சொல்லியிருந்தாலும் ஏற்புடையதல்ல" என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் சுமித்ர மகாஜன், "எல்லாப் பிரச்சினைகளிலும் பிரதமரை இழுப்பது சரியல்ல" என்றார். அதேவேளையில், வெங்கய்யா நாயுடு அமர்ந்திருந்த பக்கம் நோக்கி, "வெங்கய்யா அவர்களே, ஆனாலும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்புடையதல்ல. கிரிராஜ் சிங் அடுத்தவர்கள் மனம் புண்படும் வகையில் பேசியிருக்கக் கூடாது. அவர் பேச்சு என்னையும் வேதனைப்படுத்தியது" என்றார்.

இவ்விவகாரம் தவிர, முஸ்லிம்களுக்கு வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் என சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் கூறியதற்கும் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது.

முன்னதாக, மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணை யமைச்சர் கிரிராஜ் சிங் பேசும்போது, "ராஜீவ் காந்தி நைஜீரியப் பெண்ணை திருமணம் செய்திருந்து, அப்பெண் வெள்ளை நிறத்தவராக இல்லாமலிருந்தால் காங்கிரஸ் அவரது தலைமையை ஏற்றிருக்குமா" எனக் கேள்வியெழுப்பினார்.

இது ஊடகங்களில் வெளியாகி நாடு முழுதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

வருத்தம் தெரிவித்தார் கிரிராஜ் சிங்:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து தான் தெரிவித்த கருத்துக்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் இன்று (திங்கள்கிழமை) வருத்தம் தெரிவித்தார்.

முன்னதாக, கிரிராஜ் சிங் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர் காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் அவை 20 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், அவை மீண்டும் கூடியபோது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து தான் தெரிவித்த கருத்துக்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வருத்தம் தெரிவித்தார்.

மோடி வலியுறுத்தல்

முன்னதாக, நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கபூர்வமாக அமைய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் பகுதியின் முதல் நாளிலேயே சர்ச்சைக்குரிய நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டம் தாக்கல் செய்யப்பட உள்ளதால் அவையில் அனல் பறக்கும் விவாதம் எழும்பும் என்று தெரிகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டரில், "நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கபூர்வமாக அமைய வேண்டும். பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக நலன் பயக்கும் வகையில் விவாதங்கள் நடைபெற வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் மே 8-ம் தேதி நிறைவடைகிறது. மாநிலங்களவையின் கூட்டம் ஏப்ரல் 23-ம் தேதி தொடங்கி மே 13-ல் முடிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x