Published : 29 Apr 2015 02:30 PM
Last Updated : 29 Apr 2015 02:30 PM
ஒதுக்கப்பட்ட அரசு வீடுகள் காலியாகவில்லை என்பதால் நாள் ஒன்றுக்கு ரூ.7000 வாடகையில் ஒரு வருடமாக நாடாளுமன்ற எம்.பி.க்கள், நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் மே 8-ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு புதிதாக தேர்தெடுக்கப்படும் 543 எம்பிக்களுக்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறையின் சார்பில் டெல்லியின் முக்கியப் பகுதிகளில் உள்ள அரசு வீடுகள் ஒதுக்கப்படுகிறது. அப்போது, கடந்த முறை தேர்தெடுக்கப்பட்டதால் ஏற்கெனவே தங்கி இருக்கும் எம்பிக்கள் தம் வீடுகளை காலி செய்ய கால அவகாசம் தேவைப்படுகிறது.
இதனால், முன்னாள் எம்பிக்கள் காலி செய்யும் வரை முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட 315 புதியவர்களுக்கு அரசு மாற்று ஏற்பாடுகள் செய்து தருகிறது. இந்த வகையில் ஒன்றாக டெல்லியின் சாணக்யபுரியில் அமைந்துள்ள நட்சத்திர ஓட்டலான அசோகாவில் நாள் ஒன்றுக்கு ரூ.7000 வாடகையில் எம்பிக்களுக்கு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்துடன், நட்சத்திர அறையின் மற்ற சேவைகள் கட்டணம் சேர்த்து ரூ.8000-ஐ தாண்டுகிறது.
இதில், கடந்த வருடம் தங்கத் துவங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட மக்களவை மற்றும் மாநிலங்களையின் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் காலி செய்து விட, இரு அவைகளின் சுமார் 25 எம்பிக்கள் மட்டும் ஒரு வருடமாக தங்கி உள்ளனர்.
இதனால், மத்திய அரசுக்கு பெருத்த நஷ்டமாவதை தடுக்க மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளது. இதற்காக மக்களவை எம்பிக்கள் மே 8 மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் மே-13 ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து வெங்கய்ய நாயுடு கூறுகையில், 'அனைத்து எம்பிக்களையும் காலி செய்ய வேண்டி இன்று நோட்டீஸ் அனுப்பப்படும். இதை ஏற்று காலி செய்யாதவர்கள் அன்றாட வாடகையாக ரூ.7000, தம் செலவில் கட்ட வேண்டி இருக்கும்.’ என எச்சரித்துள்ளார்.
டெல்லியின் அசோகா ஓட்டலில் எம்பிக்களுக்கு அரசு செலவில் தங்கும் வசதி, நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும் போது மட்டும் எனக் கூறப்படுகிறது. எனினும், பல எம்பிக்கள் கூட்டத்தொடருக்கு பின்பும் அசோகா ஓட்டலை காலி செய்யாமல் வைத்திருப்பதாகவும், இதனால் அந்த செலவையும் அரசு ஏற்க வேண்டி வருவதாகவும் கருதப்படுகிறது.
எனினும், இதற்காக அசோகா ஓட்டல் சார்பில் எம்பிக்களுக்கான அறைகளின் கட்டணத்தில் அதிகபட்ச தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இதையும் மீறி அரசிற்கு கடந்த ஒரு வருடத்தில் எம்பிக்களுக்காக கட்டிய வாடகை தொகை ரூபாய் 30.75 கோடிகளைத் தாண்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து 'தி இந்து' எம்பிக்கள் வட்டாரத்திடம் கேட்ட போது, 'வெறும் ஐந்து வருடங்களுக்காக தங்க வரும் எம்பிக்கள் தம் அரசு வீடுகளை நட்சத்திர ஓட்டலாக மாற்றிய பின் தான் அதில் குடிபுக வேண்டும் என விரும்புகின்றனர். இதனால், அவர்கள் விருப்பத்திற்கு ஏதுவாக அரசு வீடுகளை பழுது பார்க்க கால தாமதம் ஆகி விடுகிறது. இது நாடாளுமன்ற கூட்டத் தொடர் அல்லாத காலங்களில் நடக்கும் மற்ற கூட்டங்களுக்கும் வர வேண்டி இருப்பதால் அங்கு தொடர்ந்து தங்க வேண்டி உள்ளது..' எனக் கூறுகிறார்கள்.
தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் டெல்லியின் சாணக்யபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லங்களின் தங்கினர். இதில், பாமகவின் ஒரே எம்பியான அன்புமணி ராமதாஸ் மட்டும் அசோகா ஓட்டலில் தங்கி இருந்தார். அவருக்கு அரசு வீடு ஒதுக்கப்பட்டதால், கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்கு ஒரு வாரம் முன்னதாகவே அறையை காலி செய்து குடி புகுந்தார். தமக்கு ஒதுக்கப்பட்ட அரசு வீடுகளுக்கு நியாயமான காரணங்களால், இன்னும் குடிபுக இயலாமல் தமிழ்நாடு இல்லங்களில் தங்கியுள்ள அதிமுக எம்பிக்களின் வாடகை செலவை மத்திய அரசு ஏற்று வருகிறது.
டெல்லியின் அசோகா மட்டும் அன்றி ஜன்பத் மற்றும் சாம்ராட் ஆகிய நட்சத்திர ஓட்டல்களிலும் அரசு செலவில் எம்பிக்கள் தங்கியுள்ளனர். மக்களவையின் இணையதளத்தில் தற்போது 30 எம்பிக்களின் விலாசம் நட்சத்திர ஓட்டலாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், மபி, உபி, பிஹார், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், ஜார்கண்ட், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த பாஜக, காங்கிரஸ், லோக் ஜன சக்தி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, சிவசேனா ஆகிய கட்சிகளின் எம்பிக்கள் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT