Last Updated : 14 Apr, 2015 01:03 PM

 

Published : 14 Apr 2015 01:03 PM
Last Updated : 14 Apr 2015 01:03 PM

கார் திருட்டு வழக்கில் அசாம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது

கார் கொள்ளை கும்பலுடன் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட அசாம் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. ருமிநாத் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர் கூறும்போது, "காங்கிரஸ் எம்.எல்.ஏ. ருமிநாத் இன்று காலை 7 மணியளவில் எம்.எல்.ஏ. விடுதியில் இருந்து கைது செய்யப்பட்டார். கார் கொள்ளை கும்பலுடன் தொடர்பு இருப்பதாக அவர் மீது புகார் வந்தது. அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதலில் அவரை திஸ்பூர் காவல் நிலையத்த்துக்கு கொண்டு சென்றோம். விரைவில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம்.

ருமிநாத் மீது கிரிமினல் சதிதிட்டம், ஏமாற்றுதல் உள்ளிட்ட குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 120 (பி), 420, 212 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளோம்" என்றார்.

முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ருமிநாத், "நான் தலைமறைவு ஆகவில்லை, நான் அப்பாவி. முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பித்துள்ளதால் நான் குற்றவாளி என்று அர்த்தமில்லை. கார் கடத்தல் கும்பல் தலைவன் அனில் சவுகானுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

சவுகானின் மனைவியை மட்டும் எனக்கு தெரியும். ஏனெனில் அவரும் ஒரு காங்கிரஸ் தொண்டர். என் மீது வீண் பழி சுமத்த நடத்தப்படும் அரசியல் சதி இது.

சட்டத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். என் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறைக்கு செல்வதற்கு தயாராக இருக்கின்றேன்" என்று கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

கார் கடத்தல் வழக்கில், எம்.எல்.ஏ. ருமிநாத் தரப்பில் இரண்டு முறை முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இரண்டு முறையும் குவாஹாட்டி நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த 8-ம் தேதி ருமிநாத்தின் முன்னாள் கணவர் ஜேக்கி ஜாகிரும் இதே வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கார் கடத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக ருமிநாத்திடம் விளக்கம் கோரி அசாம் காங்கிரஸ் தலைவர் அஞ்சன் தத்தா நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x