Published : 11 Apr 2015 08:48 AM
Last Updated : 11 Apr 2015 08:48 AM
மகாராஷ்டிரத்தில் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 12 சுங்கச்சாவடிகள் மூடப்படும் என்று அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார்.
இதுகுறித்து மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் பட்னாவிஸ் கூறும்போது, “மாநிலத்தில் 12 சுங்கச்சாவடிகள் வரும் மே 31-ம் தேதி நள்ளிரவுடன் மூடப்படும். மேலும் 53 சுங்கச்சாவடிகளில் தனியார் இலகுரக வாகனங்கள் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும்.
மும்பையின் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளில் 5 இடங்களில் உள்ள சுங்கச் சாவடிகள் மற்றும் மும்பை புணே எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள சுங்கச் சாவடிகள் தொடர்பாக கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையிலான கமிட்டி தனது அறிக்கையை ஜூலை 31-ம் தேதி அளித்த பிறகு முடிவு செய்யப்படும்” என்றார்.
மகாராஷ்டிரத்தில் மே 31-ம் தேதியுடன் மூடப்படும் 12 சுங்கச் சாவடிகளில் 11 சாவடிகள் எம்எஸ்ஆர்டிசி என்ற நிறுவனத்துக்கு சொந்தமானவை ஆகும்.
ஒரு சாவடி பொதுப்பணித் துறைக்கு சொந்தமானதாகும். இதுபோல் தனியார் இலகுரக வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகளுக்கு திறக்கப்படும் 53 சாவடிகளில் 27 சாவடிகள் பொதுப்பணித் துறைக்கும் 26 சாவடிகள் எம்எஸ்ஆர்டிசி நிறுவனத்துக்கும் சொந்தமானவை ஆகும்.
தேர்தல் வாக்குறுதி
மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற தேர்தலில்போது, “இம்மாநிலத்தை சுங்கச்சாவடிகள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம்” என பாஜக வாக்குறுதி அளித்தது.
ஆனால் தேர்தலுக்குப் பிறகு, “அனைத்து சுங்கச் சாவடிகளையும் மூடுவது சாத்தியமில்லை. என்றாலும் கட்டண வசூலில் இருந்து மக்கள் ஓரளவு நிவாரணம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்” என பாஜக அறிவித்தது.
இந்நிலையில் 12 சுங்கச் சாவடிகள் மூடப்படும் அறிவிப்பை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT