Published : 17 Apr 2015 11:47 AM
Last Updated : 17 Apr 2015 11:47 AM
இந்துத்துவம் மதம் அல்ல... அது ஒரு வாழ்க்கை முறை என பிரதமர் மோடி பேசியுள்ளார். கனடாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், வான்கோவரில் உள்ள சீக்கியர் புனித தளமான குருதுவாராவுக்குச் சென்றார். அவருடன் கனடா நாட்டுப் பிரதமர் ஸ்டீபன் ஹார்பரும் சென்றார்.
அங்கு உரையாற்றிய பிரதமர் மோடி, "கனடாவில் வாழும் சீக்கியர்கள் அவர்களது பணி காரணமாக இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பகத் சிங்கின் பங்கு போற்றுதற்குரியது. சீக்கியர்கள் தியாகத்துக்கு பெயர் பெற்றவர்கள். தியாகங்கள் மூலம் மனிதத்தை பேண சீக்கியர்கள் தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என்றார்.
அங்கிருந்து லக்ஷ்மி நாராயணன் கோயிலுக்குச் சென்றார். அங்கு பேசிய மோடி, "இந்துத்துவம் குறித்து இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு அழகான விளக்கத்தை கொடுத்துள்ளது. அது எனக்கு மிகவும் பிடிக்கும். அது "இந்துத்துவம் மதம் அல்ல அது ஒரு வாழ்க்கை முறை" என்பதே.
இந்து மதம் போதிக்கும் அறிவியல் சார்ந்த வாழ்க்கை முறை இயற்கைக்கு பயனளிப்பதாக உள்ளது. வாழ்க்கையின் சிறு சிறு பிரச்சினைகளுக்கும்கூட இந்து மதத்தில் தீர்வு இருக்கிறது. எனவே மக்கள் இந்துத்துவம் மூலம் மனிதத்தை பேண முயற்சிக்க வேண்டும்" என்றார்.
யோகாவுக்கு முக்கியத்துவம்:
ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. அங்கீகரித்துள்ளதை சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி, யோகா கலையை இந்தியர்கள் பரப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இந்தியா - கனடா நட்புறவு பலப்பட கனடா வாழ் இந்தியர்கள் பங்களிப்புக்கு பாராட்டுகள் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT