Published : 15 Apr 2015 08:48 AM
Last Updated : 15 Apr 2015 08:48 AM
ஆசியாவில் முதல்முறையாக கர்நாடகத்தில் இன்று மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் சேவையை மாநில முதல்வர் சித்தராமையா தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் விபத்தில் சிக்கியவருக்கு 10 நிமிடத்தில் உதவ முடியும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் யு.டி.காதர் தெரிவித்தார்.
இந்தியாவின் தகவல் தொழில் நுட்பத்துறையின் தலைநகராக விளங்கும் பெங்களூருவில் சில ஆண்டுகளாக கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதனால் விபத்து நிகழும் இடங்களுக்கு ஆம்புலன்ஸ் வாகனங்களால் விரைவாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு கர்நாடகத்தில் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் சேவை தொடங்க அம்மாநில அரசு முடிவெடுத்தது.
இந்நிலையில் கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் யு.டி. காதர் நேற்று பெங்களூருவில் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸாக செயல்படும் மோட்டார் சைக்கிள் களை அறிமுகம் செய்துவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
ஆசியா கண்டத்திலேயே முதல் முறையாக மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் சேவை கர்நாடகத்தில் இன்று தொடங்கப்படுகிறது. பல உயிர்களை காக்கப் போகும் இந்த திட்டத்தை முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் தொடங்கி வைக்கிறார்.
மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் சேவை முதல் கட்டமாக பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கல்புர்கி, பெலகாவி, ஹூப்பள்ளி-தார்வாட், தாவணகெரே, துமகூரு, விஜயபுரா, சிவமொகா ஆகிய இடங்களில் தொடங்கப்படுகிறது.
ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மோட் டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் மூலம் போக்குவரத்து நெரிசலை எளிதாக கடந்து விபத்து நடந்த இடத்தை அடைய முடியும். எனவே விபத்தில் சிக்கியவர்களுக்கு 10 நிமிடங்களில் சிகிச்சை அளிக்கும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் சைக்கில் ஆம்புலன்ஸில் ஸ்டெத்தஸ்கோப், ஆக்ஸிஜன் சிலிண்டர் உள்ளிட்ட 40 வகையான மருத்துவ உபகரணங்களும் 53 வகையான மருந்து மாத்திரைகளும் இடம் பெற்றுள்ளன. அவசர உதவி எண் 108-ஐ தொடர்பு கொண்டால் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் முதலுதவி செய்வதற்கு வேகமாக வருவார்கள். இந்த திட்டம் நாளடைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்''என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT