Published : 06 Apr 2015 09:55 AM
Last Updated : 06 Apr 2015 09:55 AM
மத்தியப்பிரதேசத்தில் நேற்று காலையில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதைத் தடுக்க முயன்ற ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் மீது மணல் மாபியா கும்பலைச் சேர்ந்தவர்கள் லாரியை ஏற்றி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து மொரேனா மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நவநீத பாஸின் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
சம்பல் ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, நூராபாத் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் அருகில் உள்ள கிராமத்துக்கு சென்றனர். அப்போது, சட்டவிரோதமாக மணல் ஏற்றிக்கொண்டு வேகமாக சென்ற லாரியை முந்திச் சென்று மடக்கினர். போலீஸாரைப் பார்த்ததும் தப்பியோட முயன்ற லாரி ஓட்டுநரைப் பிடிப்பதற்காக போலீஸார் வேனிலிருந்து இறங்கி ஓடினர்.
அப்போது, லாரி ஓட்டுநர் பின்புறமாக வேகமாக இயக்கியதில் அருகில் உள்ள பள்ளத்தில் அந்த லாரி கவிழ்ந்தது. இதில் கான்ஸ்டபிள் தர்மேந்திர சவுகான் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். பின்னர் சவுகானின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT