Published : 15 Mar 2015 06:45 PM
Last Updated : 15 Mar 2015 06:45 PM
கிருஷ்ணகிரியின் பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் 48 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், உத்தரப் பிரதேசத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபருக்கு வலை விரிப்பதற்காக தமிழகத்தில் இருந்து 15 பேர் கொண்ட போலீஸ் படை பரேலியில் ஒரு வாரம் தங்கி இருந்தது.
கடந்த ஜனவரி 23 ஆம் தேதி நள்ளிரவு கிருஷ்ணகிரியின் ராமாபுரத்தில் உள்ள பாங்க் ஆஃப் பரோடா வங்கி குந்தாரப்பள்ளி கிளையில் கொள்ளை அடிக்கப்பட்டது. இதன் லாக்கரில் இருந்த சுமார் 12 கோடி மதிப்புள்ள 6033 பவுன் 48 கிலோ தங்கம் மற்றும் ஒரு தொகையும் திருடப்பட்டு இருந்தது.
இதில், வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் திருடியிருக்கலாம் என போலீஸாருக்கு சந்தேகம் இருந்தது. எனவே, வட இந்தியாவின் ராஜஸ்தான், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் பீகார் மற்றும் உபி ஆகிய மாநிலங்களுக்கு பல தனிப்படைகள் அமைத்து அனுப்பட்டன. அதில் ஒரு படையினர் உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் உள்ள பரேலிக்கு கடந்த வாரம் விசாரணை செய்ய வந்தனர்.
சுமார் ஒரு வாரமாக பரேலியில் முகாம் இட்ட சிறப்பு படைக்கு தர்மபுரியின் காவல்துறை கண்காணிப்பாளரான லோகநாதன் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரியின் துணை கண்காணிப்பாளர் சந்தானப் பாண்டியன் ஆகியோருடன் மூன்று துணை கண்காணிப்பாளர்கள், மூன்று ஆய்வாளர்கள், நான்கு துணை ஆய்வாளர்கள் உட்பட 15 பேர் அந்த படையில் இடம் பெற்றிருந்தனர்.
டெல்லியில் இருந்து சுமார் 265 கி.மீ தொலையில் உள்ள பரேலி நகரின் குஷ்பு என்கிளேவ் பகுதிவாசியான அப்ரார் உசைன் என்பவர் நேற்று முன் தினம் நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.
பரேலியின் குற்றப்பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து தனிப்படையினரால் விசாரணை செய்யப்பட்ட அப்ரார், டெல்லி வழியாக விமானம் மூலம் தமிழகம் அழைத்து செல்லப்பட்டார்.
இது குறித்து 'தி இந்து'விடம் பரேலி மாவட்ட குற்றப்பிரிவின் நகரக் காவல்துறை கண்காணிப்பாளரான சுரேந்தர் பிரதாப் கூறுகையில், 'கிருஷ்ணகிரியில் திருடப்பட்ட நகைகளை அப்ரார் உருக்கி வெட்டி விற்பனை செய்து கொடுத்திருக்கிறார். அவரிடம், அதற்கான இயந்திரங்கள் பறிம்தல் செய்யப்பட்டன.
இந்த கொள்ளை மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும், அதற்காக இரும்பு கம்பிகளாலான கேட்டை அறுத்ததாகவும் தெரிய வந்துள்ளது. இந்தப் பகுதியில் இன்னும் ஆறு பேரை கைது செய்யும் பொருட்டு, தமிழக படையின் ஒரு பிரிவினர் இன்னும் பரேலியில் தங்கி உள்ளனர்' எனத் தெரிவித்தார்.
இந்த வழக்கில் ஏற்கெனவே உபி மாநிலத்தின் அதே பரேலி மாவட்டத்தை சேர்ந்த 49 வயதுள்ள முகம்மது ஷானாவாஸ் கர்நாடகா மாநிலத்தின் சித்ர துர்கா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாகக் கருதப்படும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் பேரில் உபியின் பரேலியில் இருந்து உசைன் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கொள்ளைக்கு பின் தப்பி உபி திரும்பியவர்கள், தங்களுக்குள் மொபைல் போன்களில் பேசிக் கொண்டனர். இதன் உரையாடல்கள் உபி மாநில போலீஸாரின் உதவியுடன் கண்காணிக்கப்பட்டு, இந்த கைது நடைபெற்றுள்ளது. இதற்கு உதவியாக உபி காவல் துறையில் உயர் அதிகாரிகளாக பணியாற்றும் தமிழர்கள் பெரிதும் உதவியாக இருப்பது வழக்க்கமாக உள்ளது.
டெல்லியை ஒட்டி அமைந்திருக்கும் உபியின் மேற்குப் பகுதி கொலை, கொள்ளை மற்றும் ஆள் கடத்தல் ஆகிய கிரிமினல் நடவடிக்கைகளுக்கு பெயர் போனது. இதுபோல், தமிழகத்தில் நடந்த கொள்ளைகளின் விசாரணைக்காக அதன் போலீஸார் உபியின் மேற்குப் பகுதிக்கு வருவது புதிதல்ல.
இதற்கு முன் தூத்துக்குடியில் கொள்ளை அடிக்கப்பட்ட எட்டு கிலோ தங்கம் மற்றும் 2.5 லட்சம் ரொக்கங்களை மீட்கும் முயற்சியில், தமிழக போலீஸ் படை கடந்த டிசம்பரில் உபியின் மேற்குப் பகுதியில் உள்ள அலிகருக்கு வந்தது. இவர்கள், தங்களுடன் கொள்ளைக்காரர்களின் தலைவனான ராம் பாபு ஹாபுடாவையும் உடன் விசாரணைக்காக கொண்டு வந்திருந்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT