Published : 05 Mar 2015 10:57 AM
Last Updated : 05 Mar 2015 10:57 AM
ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது.
இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவரான ஓம் பிரகாஷ் சவுதாலா ஹரியாணா மாநிலத்தில் ஐந்து முறை முதல்வராகப் பதவி வகித்துள்ளார். கடந்த 2000-ம் ஆண்டு அவர் முதல்வராக இருந்தபோது மாநிலம் முழுவதும் 3,206 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்தியது. லஞ்சம் பெற்றுக் கொண்டு ஆசிரியர்களை நியமனம் செய்ததும், அதற்காக போலி ஆவணங்கள் தயாரிக்கப் பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா, ஐஏஎஸ் அதிகாரிகள் இருவர் உட்பட 62 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போதே 6 பேர் இறந்துவிட்டனர். இவ் வழக்கில் கடந்த 2013 ஜனவரி 22-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா உட்பட 8 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதர குற்றவாளிகளுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அதன்பின், தனது உடல் நிலையை காரணம் காட்டி ஓம் பிரகாஷ் சவுதாலா கடந்த ஆண்டு அக்டோபரில் ஜாமீன் பெற்றார். அஜய் சவுதாலாவும் ஜாமீனில் வெளியில் வந்தார். ஆனால், ஹரியாணாவில் கடந்த அக்டோபரில் நடந்த சட்டப்பேர வைத் தேர்தலில் ஓம் பிரகாஷ் சவுதாலா தீவிர பிரச்சாரம் செய் தார். இதுகுறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது 80 வயதாகும் சவுதாலா, தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்ய கோரி கடந்த மாதம் 7-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களும் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தனர்.
நீதிபதி சித்தார்த் மிருதுல் இந்த மனுக்களை விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். அவர் தனது 400 பக்க தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
ஹரியாணாவில் ஆசிரியர் நியமனத்தில் மிகப் பெரிய முறைகேடுகள் நடந்ததற் கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன. அதிகார துஷ்பிர யோகம் நடைபெற்றிருப்பது பகிரங்கமாகத் தெரிகிறது. 18 மாவட்டங்களின் ஆசிரியர் நியமனத்தில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளன. ஒட்டுமொத்த அரசு அதிகாரமும் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஓம் பிரகாஷ் சவுதாலா, அஜய் சவுதாலா, அப்போதைய தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் சஞ்சீவ் குமார், சவுதாலாவின் சிறப்பு அதிகாரியாக இருந்த வித்யாதர் (இருவரும் ஐஏஎஸ் அதிகாரிகள்), அரசியல் ஆலோசகராக இருந்த ஷெர் சிங் பத்ஷாமி ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய 10 ஆண்டுகள் சிறை தண்டனை சரியானதுதான்.
தற்போது ஜாமீனில் உள்ள அஜய் சவுதாலா மற்றும் வழக்கில் தண்டனை பெற்ற மற்றவர்கள் உடனடியாக சிறை அதிகாரிகள் முன்னிலையில் சரணடைய வேண்டும். எல்லோருடைய மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. எனினும் விசாரணை நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 50 பேரின் சிறை தண்டனை இரண்டு ஆண்டுகளாகக் குறைக்கப் படுகிறது.
இவ்வாறு நீதிபதி சித்தார்த் மிருதுல் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT