Published : 20 Mar 2015 09:54 AM
Last Updated : 20 Mar 2015 09:54 AM
சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான தீஸ்தா சீதல்வாட் மற்றும் அவரது கணவர் ஜாவேத் ஆனந்த் ஆகியோரின் முன் ஜாமீன் மனுவை வேறு நீதிபதிகள் அடங்கிய பெரிய அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று மாற்றி உத்தரவிட்டது. அதேநேரம் அவர்களை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது அகமதாபாத்தில் உள்ள குல்பர்க் சொசைட்டி பகுதியில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம் கட்டுவதற்காக தன்னார்வத் தொண்டு நிறுவனமான் சப்ரங் அறக்கட்டளை நிதி திரட்டியது.
இந்த நிதியை முறைகேடு செய்ததாக தீஸ்தா தம்பதி மீது குஜராத் குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மோசடி, நம்பிக்கை துரோகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து இவர்கள் இருவரும் குஜராத் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். ஆனால் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை எனக்கூறி ஜாமீன் தர மறுத்துவிட்டது. இதையடுத்து உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது. இதையடுத்து, மறுநாள் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஜே.முகோபாத்யா மற்றும் என்.வி. ரமணா அடங்கிய அமர்வு பிப்ரவரி 19 வரை இவர்களை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது.
அதன் பிறகு பிப்ரவரி 19-ம் தேதி இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் ஆதர்ஷ் குமார் கோயல் அடங்கிய அமர்வு இடைக்கால தடையை நீட்டித்ததுடன் தீர்ப்பை ஒத்தி வைத்தது.
இதையடுத்து, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆதர்ஷ் குமார் அடங்கிய அமர்வு, பல்வேறு அம்சங்களை ஆராய வேண்டி இருப்பதால் முன் ஜாமீன் மனுவை வேறு நீதிபதிகள் அடங்கிய பெரிய அமர்வுக்கு மாற்றி நேற்று உத்தரவிட்டது. அதேநேரம் அந்த அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வரை இருவரையும் கைது செய்வதற்கான தடை தொடரும் என்றும் அறிவித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT