Last Updated : 14 Mar, 2015 08:45 AM

 

Published : 14 Mar 2015 08:45 AM
Last Updated : 14 Mar 2015 08:45 AM

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு டைரி...1: தீர்ப்பை தீர்மானிக்கும் கிரானைட், இத்தாலியன் சலவை கற்கள்

தமிழக லஞ்ச ஒழிப்பு துறை கட்டிடங்களை மதிப்பீடு செய்த‌தில் தவறு செய்துள்ளது என விசாரணை நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. எனவே கட்டிடங்க‌ளின் மதிப்பீட்டை பொறுத்தவரை அந்தந்த ஆண்டுகளில் ஜெயலலிதா தாக்கல் செய்த வருமான வரித்துறை கணக்கை கருத்தில் கொள்ள‌ வேண்டும் என்பது ஜெயலலிதா தரப்பு வாதம்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டின் தீர்ப்பு அவரது அரசியல் எதிர்காலத்தையே தீர்மானிக்கப் போகிறது.தமிழகம் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவே கர்நாடக உயர்நீதிமன்றத்தை உற்று கவனித்து கொண்டிருக்கிறது.

18 ஆண்டுகளாக நீண்ட விசாரணை, சுமார் ஆற‌ரை லட்சம் ஆவணங்கள்,259 சாட்சியங்கள்..நாளுக்கு நாள் எக்கசக்க மான எதிர்பார்ப்புகள் எகிறி கொண்டிருக் கின்றன. மேல்முறையீட்டு விசா ரணையை 41 நாட்களில் சுனாமி வேகத் தில் முடித்துவிட்டு, கர்நாடக உயர்நீதி மன்றத்தில் கதவு மூடப்பட்ட அறை எண் 14-ல் அமர்ந்து தீர்ப்பை தயார் செய்து கொண்டிருக்கிறார் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி.

இவ்வழக்கு விசாரணையின் போது வாத, பிரதிவாதங்களைக் கேட்டு நீதிபதி அதிர்ச்சி, ஆச்சர்யம், அதிருப்தி, கோபம், ஏமாற்றம் உள்ளிட்ட பல்வேறு உணர்வு களை வெளிப்படுத்தும் கேள்விகளை எழுப்பினார். நீதிமன்றத்தில் ஒலித்த அதே கேள்விகளை இவ்வழக்கை கவனிக்கும் `தி இந்து'வாசகர்களும் எதிரொலித்தனர். நமது இணையதளத்திலும், சமூக வலைத்தளங்களிலும் வழக்கு தொடர்பாக சரமாரியான கேள்விகளையும், அவர் களது ஆக்கப்பூர்வமான விமர்சனங் களையும், தெளிவான கருத்துகளையும் முன்வைத்தனர்.

இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வீடுகள் மதிப்பிடப்பட்ட விதம் முக்கியமாக அங்கு பதிக்கப்பட்ட விலை உயர்ந்த மார்பிள் கற்களின் விலை மதிப்பீடு தீர்ப்பை தீர்மானிக்கும் அம்சமாக உள்ளது. எனவே அவை குறித்த நீதிமன்ற விசாரணையை விரிவாக பார்க்கலாம்.

ஜெயலலிதாவின் வீட்டில் பதிக்கப்பட் டுள்ள மார்பிள் குறித்த விசாரணையின் போது நீதிபதி, “அதிகப்படியாக ஒரு சதுர அடி மார்பிளின் விலை எவ்வளவு என மதிப்பீட்டீர்கள்?'' என கேட்டார். அதற்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி சொன்ன பதிலில் நீதிபதி அதிர்ந்தார். “1994-95-ல் ஒரு சதுர அடி மார்பிளின் விலை 5919 ரூபாயா? மதிப்பிட்ட அதிகாரிகளுக்கு கொஞ்சம் கூட “காமன்சென்ஸ்” இல்லையா?'' என கடுமையான சொற்களையே பிரயோகித்தார்.

19 கட்டிடங்களில் 5 நாட்கள் மதிப்பீடு

1991-96 காலக்கட்டத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 396.59 சொத்துக் குவித்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடுத்தது. தலைமை விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு வழக்கில் தொடர்புடைய 19 கட்டிடங்களை மதிப்பிட 11 பொறியாளர்கள் கொண்ட குழுவை அமைத்தார். இந்த குழுவினர் 7.12.1996 முதல் 12.12.1996 வரை தமிழ்நாடு, ஹைதராபாத்தில் உள்ள கட்டிடங்களை மதிப்பீடு செய்த‌னர்.

இது தொடர்பாக தலைமை பொறி யாளர்கள் ஜெயபால் (அரசு தரப்பு சாட்சி 116), சொர்ணம் (அரசு தரப்பு சாட்சி 107), வேலாயுதம் (அரசு தரப்பு சாட்சி 98) ஆகி யோர் அளித்த சாட்சியத்தில் 19 கட்டிடங் களின் மதிப்பு ரூ.28 கோடியே 17 லட்சத்து 40 ஆயிரத்து 430. இதில் 3 கட்டிடங் கள் மட்டுமே ஜெயலலிதாவுக்கு சொந்த மானவை. போயஸ் கார்டனில் உள்ள‌ 31, 36 கதவு எண்கள் கொண்ட‌ பங்களா மற்றும் ஹைதராபாத் திராட்சை தோட்ட பங்களாவின் மதிப்பு ரூ.13 கோடியே 64 லட்சத்து 31 ஆயிரத்து 901.

இந்த கட்டிடங்களில் ஒவ்வொரு தளத்திலும் உள்ள பல்வேறு அறைகளில் பல விதமான மார்பிள், விலை உயர்ந்த கிரானைட், உயர் ரக டைல்ஸ் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தோ இத்தாலியன், இத்தாலியன் ஒயிட், இந்தியன் ரெட் சிகாகோ, இந்தியன் ஓரியன், ரோமன் சில்வியா, ரோஸா வெர்னா, கிரே வில்லியம் உள்ளிட்ட மார்பிள், உயர் ரக தேக்கு மரம், தொல்பூர் கற்கள் அதிகளவில் பயன்படுத்த‌ப்பட்டுள்ளன.

மலைக்க வைக்கும் மார்பிள்

போயஸ் கார்டனில் 5 தளங்கள் கொண்ட பங்களாவின் தளத்திற்கு வித விதமான மார்பிள், கிரானைட், உயர் ரக தேக்கு மரம் ஆகியவை பதிக்கப்பட் டுள்ளது. இதனை 5 நாட்கள் மதிப் பிட்ட பொதுப்பணித்துறை பொறியாளர் கள் மார்பிள், தேக்கு மரம், தொல்பூர் கற்கள் ஆகியவை சதுர மீட்டர் அளவு முறையில் கணக்கிட்டனர். ஹைதராபாத் திராட்சை தோட்டத்தில் உள்ள ஜி.டி.மெட்லா வீட்டில் இந்தோ இத்தாலியன் மார்பிள் உள்ளிட்ட விலை உயர்ந்த மார்பிள் அதிகளவில் பதிக்கப்பட்டுள்ளது. வண்ணமயமான உயர் ரக மார்பிள் என்பதால் அவை சதுர மீட்டர் அளவு முறையில் கணக்கிடப்பட்டது. சிறுதாவூர், பையனூர் உள்ளிட்ட பல்வேறு இடங் களில் உள்ள கட்டிடங்களை மதிப்பிட்ட போது சிலவற்றை சதுர அடியிலும், மற்றவ‌ற்றை சதுர மீட்டரிலும் மதிப்பீடு செய்திருந்ததால் நீதிபதி `திடீர்' கேள்வி களை எழுப்பிக் கொண்டே இருந்தார்.

அந்த கட்டிடங்களில் தளங்களை அலங்கரிக்க பதிக்கப்பட்ட மார்பிள், கிரானைட், தேக்கு மரம் ஆகியவற்றின் மதிப்பு ரூ.3.62 கோடி. மார்பிளை பொறுத்த வரை அதிகபட்சமாக ஒரு சதுர அடி ரூ.5919 (இந்தோ இத்தாலியன் ஒயிட் மார்பிள்), ஒரு சதுர மீட்டர் சுமார் 30 ஆயிரம் எனவும், குறைந்தப்பட்சமாக ரூ.300 எனவும் மதிப்பிடப்பட்ட‌து. ஒவ்வொரு கட்டிடங்களிலும் ஃபேன்ஸி ரக டைல்ஸ் 50 சதவீதம் பயன்படுத்தப்பட்டுள்ளதால், அப்போதைய சந்தை மதிப்பில் கணக்கிடப்பட்டது என அரசு சான்று ஆவணம் 661-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த‌ மார்பிள், கிரானைட், டைல்ஸ் ஆகியவை மும்பையில் உள்ள `நியூ மார்பிள் & கிரானைட்' நிறுவனத்தில் வாங் கப்பட்டவை. மும்பையில் இருந்து லாரி மூலம் சென்னைக்கும், ஹைதராபாத் துக்கும் கொண்டுவரப்பட்ட‌து. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாள‌ர் கே.மாடசாமி (அரசு தரப்பு சாட்சி) சாட்சியம் அளித்துள்ளார் என ஆதாரம் காட்டப்படுகிறது.

அப்போது கே.மாடசாமி.. இப்போது கே.எம்.சாமி

ஜெயலலிதாவின் சொத்துகளை மிகைப்படுத்திக் காட்டி, வழக்கை புனைய வேண்டும் என்பதற்காக கட்டிடங்களின் மதிப்பு அதிகமாக சித்தரிக்கப்பட்டது. மேலும் கட்டிடங்கள் தகுதி குறைந்த பொறி யாளர்களால் மதிப்பீடு செய்யப்பட்டன.

19 கட்டிடங்களின் மொத்த மதிப்பு ரூ.10 கோடி. அதில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 3 கட்டிடங்களின் மதிப்பு ரூ.3.62 கோடி மட்டுமே என வருமான வரித் துறை தீர்ப்பாயம் சான்றழித்துள்ளது.

இது தொடர்பாக ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார், “கட்டிட மதிப் பீட்டின் உண்மை தன்மையை புரிந்து கொள்ள மார்பிள் மதிப்பீடு செய்யப் பட்டதை குறிப்பிடலாம். அப்போதைய சந்தை மதிப்பில் ரூ.100 விற்ற இத்தாலியன் ஒயிட் மார்பிள் 50 மடங்கு அதிகமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா தரப்புக்கு தேவையான அனைத்து மார்பிள்களும் மும்பையில் உள்ள `நியூ மார்பிள் & கிரானைட்' நிறுவனத்தில் வாங்கப்பட்டன.

இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாள‌ர் கே.எம்.சாமி (குற்றவாளி கள் தரப்பு சாட்சி) சாட்சியம் அளித்துள் ளார். இவரே 1997-ல் கே.மாடசாமி என்ற பெயரில் அரசு தரப்புக்கு சாட்சியம் அளித்துள்ளார். அவரது சாட்சியத்தில் ரூ.100 மதிப்புள்ள மார்பிளை அதிகளவில் வாங்கியதால் 10 சதவீதம் தள்ளுபடி செய்து ரூ 90-க்கு விற்றேன்.

மும்பையில் இருந்து சென்னை, ஹைதராபாத்தில் இறக்குவது வரையிலான லாரி போக்குவரத்து செலவையும் நானே ஏற்றுக்கொண்டேன்'' என நீதிபதி டி'குன்ஹா முன்னிலையில் 2014-ல் ஆதாரங்களுடன் சாட்சியம் அளித் தார்'' என நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

20 சதவீத தள்ளுபடி சரியா?

இதையடுத்து அரசு தரப்பு ம‌திப்பீட் டின் உண்மை தன்மை சந்தேகத் திற்குரியது. எனவே நீதிபதி குன்ஹா அரசு தரப்பு மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த மதிப்பில் 20 சதவீதம் தள்ளுபடி செய்து, 19 கட்டிடங்களின் மதிப்பு ரூ.22 கோடி என ஏற்றுக்கொள்கிறேன் என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மேல்முறையீட்டில் ஜெயலலிதாவின் தரப்பு, `தமிழக லஞ்ச ஒழிப்பு துறை கட்டிடங்களை மதிப்பீடு செய்த‌தில் தவறு செய்துள்ளது என விசாரணை நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. வருமான வரித்துறை கணக்கின்படி 19 கட்டிடங்களின் மதிப்பு ரூ.13.62 கோடி. அதில் ஜெயலலிதாவின் 3 கட்டிடங்களின் மதிப்பு மட்டும் ரூ.3.63 கோடி. ஆனால் நீதிபதி குன்ஹா அரசு தரப்பு, குற்றவாளிகள் தரப்பு இரண்டு மதிப்பீட்டையும் ஏற்கவில்லை. அவரே எவ்வித அடிப்படையும் இல்லாமல் 20 சதவீதம் தள்ளுபடி செய்து கட்டிடத்தின் மதிப்பு ரூ.22 கோடி என வரையறுத்துள்ளார். இது முற்றிலும் முரணான அணுகுமுறை.

எனவே கட்டிடங்க‌ளின் மதிப்பீட்டை பொறுத்தவரை அந்தந்த ஆண்டுகளில் ஜெயலலிதா தாக்கல் செய்த வருமான வரித்துறை கணக்கை கருத்தில் கொள்ள‌ வேண்டும். வருமான வரித்துறை ஏற்றுக் கொண்ட மதிப்பையே க‌ட்டிடங்களின் உண்மையான மதிப்பாக கருத வேண்டும். ஏனென்றால் இதை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்த போது அதை விசாரித்த வருமான வரித்துறை தீர்ப்பாயம் அரசு தரப்பின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது' என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கின் மதிப்பீட்டில் மூல ஆதாரமாக விளங்கும் மார்பிள் விலையில் எதனை நீதிபதி குமாரசாமி ஏற்பார்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x