Published : 15 Mar 2015 11:12 AM
Last Updated : 15 Mar 2015 11:12 AM
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் மாதிரி கிராம திட்டத்தின் கீழ், தலா 5 கிராமங்களை தத்தெடுக்க பல்கலைக்கழகங்கள் முன்வர வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
பஞ்சாப் பல்கலைக்கழத்தின் சார்பில் நேற்று சண்டீகரில் நடைபெற்ற 64-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரணாப் பேசியதாவது:
வரும் 2019-ம் ஆண்டுக்குள் இந்தியாவை தூய்மையான நாடாக மாற்றுவதற்காக ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதுபோல அரசின் திட்டங்களை இணையம் மூலம் மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்காக டிஜிட்டல் இந்தியா திட்டமும் மாதிரி கிராமங்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டன.
இத்தகைய ஆக்கப்பூர்வமான திட்டங்களில் நமது கல்வி நிறுவனங்களும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் 5 கிராமங்களை தத்தெடுத்துக் கொண்டு, மாதிரி கிராமமாக உருவெடுக்கும் வகையில் கல்வி மற்றும் இதர வளத்தைக் கொண்டு அந்த கிராம மக்ககளின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT