Published : 05 Mar 2015 09:04 AM
Last Updated : 05 Mar 2015 09:04 AM
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நேற்று பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் எழுத்துப் பூர்வமாகவும், நேரடியாகவும் அளித்த பதில்கள்
திட்ட கண்காணிப்பில் எம்.பி.க்கள்
நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு:
நகரப்புற மேம்பாட்டுத் திட்டங்களின் திட்ட கண்காணிப்புக்குழுவின் இணைத் தலைமைப்பொறுப்பில் எம்.பி.க்களை அமர்த்துவது குறித்து அரசு சாதகமாக பரிசீலித்து வருகிறது.
ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் கடந்த 2014 மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இத்திட்டத்தின் கீழ் முடிக்கப்படாமல் உள்ள பணிகளை விரைவில் முடிக்கும்படி மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. திறன் மிகு நகரங்கள் உள்ளிட்ட புதிய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்ட வடிவமைப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. இத்திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும்.
1,600 ஐஏஎஸ் காலிப் பணியிடங்கள்
பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங்:
நாடு முழுவதும் 1,600-க்கும் அதிகமான ஐஏஎஸ் உட்பட குடிமைப் பணி அதிகாரிகள் பற்றாக்குறையால் நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேற்குவங்கத்தில் 359 ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பதில் 220 பேர்தான் பணியில் உள்ளனர். 139 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 118 பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டியுள்ளன.
குடிமைப் பணித் துறையில் உள்ள 24 வகை பதவிகளில் 6,270 பேர் பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில், 4,619 பேர் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். 1,651 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதையடுத்து, குடிமைப் பணிகள் தேர்வில் 55 பேர் ஐஏஎஸ் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டு வந்த ஒதுக்கீட்டு முறையை கடந்த 2013-ல் உயர்த்தி 180 பேர் தேர்வு செய்ப்படுகின்றனர்.
பதவி உயர்வு ஒதுக்கீட்டில், மாநில அரசு அதிகாரிகள் ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு அளிப்பதற்கான தேர்வுக் குழு கூட்டத்தைக் கூட்டுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தாமதமாகும் மெட்ரோ பணிகள்
நகர்ப்புற மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ:
டெல்லி மெட்ரோ -3 விரிவாக்கப் பணி, பெங்களூர் மெட்ரோ-1, சென்னை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் நிறைவு செய்யப்படவில்லை.
டெல்லி மெட்ரோ விரிவாக்கம், சென்னை மெட்ரோ ரயில் திட்டங்கள் 2015 மார்ச் மாதத்துக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும். இப்பணிகள் வரும் 2016 டிசம்பருக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2013 டிசம்பருக்குள் நிறைவடைய வேண்டிய பெங்களூர் மெட்ரோ-1 திட்டம் வரும் டிசம்பரில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மரம் வெட்டுதல், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்டவை தாமதத்துக்கு காரணங்களாகும்.
தொலைபேசி ஒட்டுக்கேட்பு
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்:
நியாயமான காரணங்களின் அடிப்படையில் தொலைபேசியை ஒட்டுக்கேட்கக் கோரும் கோரிக்கைகளுக்கு மாதம் சராசரியாக 5,000 அனுமதிகளை உள்துறை அமைச்சகம் அளிக்கிறது. சட்ட அமலாக்கத்துறையினர் இந்த தொலைபேசிகளை இடைமறித்து ஒட்டுக்கேட்கின்றனர். தவிர்க்க முடியாத சூழல்களில், இணைச் செயலாளர் தகுதிக்கு குறைவில்லாத அதிகாரிகளால் இந்த அனுமதி வழங்கப்படுகிறது.
நகரங்களில் தனியார் பங்களிப்பு திட்டம்
நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு:
33 நகரங்களில் பொது-தனியார் பங்களிப்புத் திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் பல்வேறு படிநிலைகளில் உள்ளன. துரித போக்குவரத்து சேவை (19), திடக்கழிவு மேலாண்மை (25), குடிநீர் விநியோகம், வாகன நிறுத்தங்கள், சாலைகள், மேம்பாலங்கள் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மொத்தம் ரூ.25,902.84 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதில், ரூ. 1,659.32 கோடி மதிப்பிலான 24 திட்டங்கள் இதுவரை நிறைவு பெற்றுள்ளன.
தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம்
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா:
தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் என்பது மட்டுமல்லாமல் நியாயமான ஊதியம் என்பதை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது. தற்போது மத்திய வர்த்தக சங்கங்களுக்கு வழங்கப்படும் குறைந்த பட்ச ஊதியம் ரூ.10,000லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பின் தரவுகளின்படி நாட்டில், 47 கோடி தொழிலாளர்கள் உள்ளனர். இதுதவிர முறைப்படுத்தப்பட்ட துறைகளில் 8 கோடி பேரும், முறைசாரா துறைகளில் 39 கோடி பேரும் பணிபுரிகின்றனர்.
தியாகிகளுக்கு ரூ.705.45 கோடி
உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு:
நடப்பு நிதியாண்டில் கடந்த ஜனவரி வரை சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களைச் சார்ந்துள்ளவர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.705.45 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2013-14-ம் நிதியாண்டில், 826.11 கோடி வழங்கப்பட்டது. கடந்த ஜனவரி நிலவரப்படி 11,434 சுதந்திரப் போராட்ட ஓய்வூதியர்களுக்கும், தியாகிகளைச் சார்ந்துள்ள 24,466 பேரும் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். தெலங்கானாவில், 2,519 பேரும், மகாராஷ்டிரத்தில் 1,494 பேரும், பிஹாரில் 1,436 பேருக்கும், மேற்குவங்கத்தில் 1,294 சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
சார்ந்துள்ளவர்களில், மேற்குவங்கத்தில் 4,316 பேருக்கும், தெலங்கானாவில் 3,313 பேருக்கும், மகாராஷ்டிரத்தில் 2,638 பேருக்கும், பிஹாரில் 2,366 பேருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
யுனெஸ்கோவுக்கு 46 பரிந்துரைகள்
கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா:
யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் புதிதாக இடம்பெறுவதற்கு இந்தியாவிலிருந்து 46 புகழ்மிக்க இடங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
நிலக்கரி சுரங்க மசோதா நிறைவேற்றம்
நிலக்கரி சுரங்கங்கள் (தனிச் சிறப்பு) மசோதா 2015 மற்றும் காப்பீட்டு மசோதா ஆகியவை நேற்று மக்களவையில் நிறைவேறியது.
நிலக்கரி சுரங்க மசோதா மூலம் நிலக்கரி சுரங்கங்களை மின்னணு முறையில் ஏலம் விடுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
காப்பீட்டுத் துறையில் 49 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் காப்பீட்டு மசோதாவும் மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT