Last Updated : 23 Mar, 2015 05:29 PM

 

Published : 23 Mar 2015 05:29 PM
Last Updated : 23 Mar 2015 05:29 PM

நிலச் சட்டத்தை குருட்டுத்தனமாக எதிர்க்காதீர்: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எவ்வித நோக்கமும் இல்லாமல் குருட்டுத்தனமாக எதிர்க்கக் கூடாது என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.

ஹைதராபாத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட வெங்கய்ய நாயுடு, "நிலச் சட்டத்தை எவ்வித நோக்கமும் இல்லாமல் வெறும் எதிர்ப்பை பதிவு செய்வதற்காக மட்டுமே குருட்டுத்தனமாக எதிர்க்கக் கூடாது. அதற்கு மாறாக, நிலச் சட்டம் தொடர்பாக ஆக்கப்பூர்வமான யோசனைகளை முன்வைக்கலாம். அதை திறந்த மனதுடன் பரிசீலிக்க அரசு தயாராக உள்ளது.

இந்திய பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம். இப்போது வளர்ச்சி மட்டுமே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும். அவ்வகையில், வளர்ச்சிக்கு வித்திடும் நிலச் சட்டம் ஏழை விவசாயிகள் நலன் பாதுகாப்பதாகவும் உள்ளது.

விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு வழங்கப்படும் இழப்பீடு குறிப்பிட்ட அந்த இடத்தின் சந்தை மதிப்பைவிட 4 மடங்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிலச்சட்டத்தில் விவசாயிகளுக்கு எதிராக தனியார் நிறுவனங்களுடன் எந்த சமரசமும் செய்யப்படவில்லை. தனியார் நிறுவனங்கள் உணவகங்கள், மருத்துவமனைகள், நிறுவனங்கள் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்த வேண்டுமானால் உரிமையாளர்களில் 80% பேரிடமாவது அனுமதி பெற வேண்டும். அதேபோல், நிலம் கையயகப்படுத்துவதால் ஏற்படக்கூடிய சமூக தாக்கங்கள் தொடர்பான மதிப்பீட்டை செய்வதும் அவசியமே. எனவே, இச்சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது அல்ல.

வேலைவாய்ப்புகளை உருவாக்கும், கிராமப்புற உட்கட்டமைப்பை மேம்படுத்தும், உற்பத்தியை உறுதி செய்யும், தொழில் வளர்ச்சிக்கு வித்திடும் 4 லட்சம் கோடி திட்டங்கள் தேங்கிக் கிடக்கின்றனர். அவற்றிற்கு எல்லாம் உயிர் கொடுக்கும் வகையிலேயே நிலச் சட்டத்தை தேசிய ஜனநாயக கூட்டணி கொண்டுவந்துள்ளது. எனவே, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எவ்வித நோக்கமும் இல்லாமல் குருட்டுத்தனமாக எதிர்க்கக் கூடாது." என கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x